கல்வி 2018

கல்வி 2018
Updated on
4 min read

அதிரடி மாற்றங்கள்

> புதிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அமைத்தல், புதிய பாடங்களைத் தொடங்க அனுமதி அளித்தல், மானியங்கள் வழங்குதல் உள்ளிட்ட உரிமைகளும் கடமைகளும் கொண்டது யூ.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு. ஆசிரியர் ஊதியத்தை நிர்ணயித்தல், ஆசிரியர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிக்க எம்.ஃபில்., பி.எச்டி. படிக்கப் படிப்புத் தொகை, ஊதியத்துடன் பி.எச்டி. படிக்க விடுப்பு போன்ற திட்டங்களையும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குதலையும்  அறிமுகப்படுத்திக் கடந்த 60 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்திவருகிறது யூ.ஜி.சி. இதைக்  கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையத்தை (Higher Education of India) நிறுவப்போவதாக மத்திய அரசு ஜூன் 27 அன்று அறிவித்தது.

> அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் தொடர்பாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  புதிய பதிவாளராக ஜெ.குமார் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஆக. 11 அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பிறப்பித்தார்.

neelumjpgright

நீளும் நீட் சிக்கல்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 13 லட்சம் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அலைந்து திரிந்து சென்று மே 6 அன்று எழுதினர். இவர்களில் 39.55 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 12-வது இடம் பெற்றார். இதனிடையே தேர்வு வினாக்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட விவகாரம் வெடித்தது.

தவறாகக் கேட்கப்பட்ட 49 வினாக்களுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் பொறுப்பேற்று அதற்கு உரிய 196 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 10 அன்று தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் நவ, 22 அன்று உயர் நீதிமன்றம் வழங்கிய கருணை மதிப்பெண் தீர்ப்பை ரத்து செய்தது.

புதுமையான பல்கலைக்கழகம்

உலகின் மிகப் புதுமையான பல்கலைக்கழக மாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை அக்.11 அன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளநிலையில் 7 ஆயிரம் மாணவர்கள், முது நிலையில் 9 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இவர்களில் இளநிலைத் துறைகளைச் சேர்ந்த மாணவர்களில் 93 சதவீதத்தினருக்கு இந்தப் பல்கலைக்கழகம் உறை விடம் அளித்துள்ளது. 4 மாணவர்களுக்கு 1 பேராசிரியர் என்ற விகிதாச்சாரம் இங்குக் கடைப்பிடிக்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்றவர்களில் 17 பேர் தற்போது ஸ்டான்ஃபோட்டு கல்வி அமைப்பின் உறுப்பினர்களாகச் செயலாற்றிவருகிறார்கள்.

சுமையைக் குறைக்குமா சி.பி.எஸ்.இ.?

கல்லூரிப் படிப்புகளைக் காட்டிலும் பள்ளிப் பாடத் திட்டம் பெருஞ்சுமையாக இருப்பதாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற 2019-ம் கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பின்பற்றப்படும் என்.சி.இ.ஆர்.டி. பள்ளிப் பாடத்திட்டமானது பாதியாகக் குறைக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் பிப். 24 அன்று தெரிவித்தார். அதேபோல் பள்ளிகளில் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்தியப் பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 19 அன்று தெரிவித்தது.

அங்கன்வாடிகளுக்கு ஆபத்தா?

நாட்டில் மொத்தமுள்ள 13.6 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 4.5 லட்சம் மையங்களில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு மார்ச் 9 அன்று   அறிக்கை தாக்கல் செய்தது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 59 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 6 மாதம் முதல் 5 வயதுவரை உள்ள 17 லட்சம் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இவற்றில் 25 குழந்தைகளுக்குக் குறைவான பதிவுகொண்டிருக்கும் 8000 சத்துணவு மையங்களைத் தமிழக அரசு மூடப்போவதாக அண்மையில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவ்வாறான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படமாட்டாது என்றும் 2,000 அங்கன்வாடி மையங்களை ஆங்கில வழி மழலை யர் பள்ளிகளாக மேம்படுத்தவிருப்ப தாகவும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மகுடம் தரித்த தருணம்

> 2018-ம் ஆண்டுக்கான தேசியக் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில் ஒட்டுமொத்தப் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 10-வது இடத்தைப் பிடித்தது.

> ஐ.ஐ.எஸ்.சி.-பெங்களூரு, ஐ.ஐ.டி. - பாம்பே, டெல்லி, மணிபால் அகாடமி,  பிட்ஸ்-பிலானி உள்ளிட்ட நாட்டின் ஆறு உயர் கல்வி நிறுவனங்களுக்குச்  சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு ஜூலை 9 அன்று அறிவித்தது. இந்தப் பட்டியலில் இன்னும் நிறுவப்படாத ஜியோ இன்ஸ்டிடியூட்டைச் சேர்த்தது சர்ச்சையைக் கிளப்பியது

vetri2jpgleft

தேர்வை நீக்குவது தீர்வா?

ஒரு முழுப் பாடத்தின் இரு சமமான தனித்தனிப் பகுதிகளாகவே பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாண்டின் பாடங்களை யும் முழுமையாகப் படிப்பது என்பது உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் ஆகியவற்றைச் சிறப்பாக எதிர்கொள்ள மாணவர்களுக்குக் கைகொடுக் கும். இந்தக் காரணங்களுக்காகத்தான் பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டையும் பொதுத் தேர்வாக நடத்துவது என்று புதிய பாடத்திட்டக் குழு 2017-ல் முடிவெடுத்தது.

இதன்படி மே 4 அன்று 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டன. ஆனால்,  பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று செப். 16 அன்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பிளஸ் 2 தேர்வின் மொத்த மதிப்பெண் 1,200-லிருந்து 600 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

வெற்றி முகம்

> கடலூர் மாவட்டம் கொஞ்சிக் குப்பத்தைச் சேர்ந்த மருத்துவர் மதன் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் 1200-க்கு 925 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

> மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகத் திருச்சியைச் சேர்ந்த 17 வயது மாணவி வில்லட் ஓவியா 500 கிராம் எடைகொண்ட ‘அனிதா சாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தார். காற்று மாசுபாடு, புவி வெப்பமடைதலின் தாக்கத்தை ஆராயும் இந்தச் செயற்கைக்கோள் அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் உள்ள அஸ்ட்ரா ஆய்வுக் கூடத்தில் இருந்து மே 7 அன்று விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

> ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் ராமன் மகசேசே விருது 2018-ம் ஆண்டில் பாரத் வட்வானி, சோனம் வங்சுக் ஆகிய இரு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி-பொருளாதார மேம்பாட்டுக்காகக் கடந்த 30 ஆண்டுகளாகச் செயலாற்றிவரும் கல்வி சீர்திருத்த வாதி சோனம் வாங்சுக். இவருடைய வாழ்க்கையைத் தழுவியே ‘3 இடியட்ஸ்’ படத்தில் ஆமிர் கானின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. கைவிடப்பட்ட நிலையில் வீதிகளில் வாழும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வைப் புனரமைக்க கடந்த 30 ஆண்டுகளாக சேவை செய்துவருபவர் மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பாரத் வட்வானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in