

அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமின்றிக் கல்வி அரசியல், கற்பித்தல் முறையில் தேவைப்படும் மாற்றங்கள், பாலினக் கல்விக்கான தேவை... இப்படி வெவ்வேறான தளங்களில் கல்வி தொடர்பாக அநேகப் புத்தகங்கள் 2018-ம் ஆண்டில் கவனம் பெற்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பாலினத்தின் பன்முகங்கள்
தன்பாலின உறவு இனிச் சட்ட விரோதம் அல்ல என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு, 2018-ல் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களைத் தவிர மற்றவர்களைக் குறித்த தெளிவு இன்னும் எட்டப்படவில்லை. இரண்டு பாலினங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையை ஒட்டியே மருத்துவம், அறிவியல், வரலாறு என அனைத்தும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்திருக்கின்றன. இது சரியா என்னும் கேள்வியை வாசகர்களின் மனத்தில் ஆழமாக எழுப்புகிறது காமன்வெல்த் நாடுகளின் விருதுபெற்ற இடையிலிங்கத்தவரான கோபி ஷங்கரின் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள் - பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு’.
மறைக்கப்பட்ட பக்கங்கள் : பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு | கோபி ஷங்கர் | விலை : ரூ.250 | கிழக்கு பதிப்பகம், சென்னை -14 | தொடர்புக்கு: 044 - 4200 9603
பெற்றோர், ஆசிரியருக்கு!
குழந்தைகளைத் தவறிழைக்க அனுமதிக்க வேண்டும், அவர்கள் தலையில் அறிவைத் திணிக்கக் கூடாது, அவர்கள்மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப ஆசிரியரும் பெற்றோரும் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளைச் செயல்படுத்த நடைமுறை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குகிறது, ‘குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்’ புத்தகம். பள்ளித் தலைமையாசிரியராகவும் எழுத்தாளராகவும் உள்ள க.சரவணன் எழுதியிருக்கும் இப்புத்தகம் குழந்தை வளர்ப்பு குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களும் சிறந்த கையேடு.
‘குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்’ | க.சரவணன் | விலை ரூ.80/- | வெளியீடு: நீலவால்குருவி | 97/55, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் | சென்னை - 600 024 | தொலைபேசி: 94428 90626
விவாதப் புள்ளிகள்
பள்ளிக் கல்வி தொடர்பான சிக்கல்களை வெறும் தகவல்களின் அடிப்படையிலோ சித்தாந்தம் மீதான உணர்வுபூர்வமான சாய்வாலோ அணுகாமல் நுணுக்கமான விவாதப் புள்ளிகளை எழுப்பி, அவற்றின் வழியாக வாசகர்களைச் சிந்தித்துச் செயல்படத் தூண்டுகிறது கல்வியும் சுகாதாரமும் - கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள். பொருளாதார அறிஞர்கள் அமர்திய சென், ஜீன் டிரீஸ் இணைந்து 2014-ல் எழுதிய ‘An Uncertain Glory- India and its Contradictions’ என்ற புத்தகம் பேராசிரியர் பொன்ராஜின் மொழிபெயர்ப்பில் தமிழில், ‘நிச்சயமற்ற பெருமை- இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்’ என்று வெளிவந்தது. அந்தப் புத்தகத்தில் கல்வி, சுகாதாரம் குறித்து எழுதப்பட்ட பகுதி இந்தப் புத்தகம்.
கல்வியும் சுகாதாரமும் - கொள்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள் | ஜீன் டிரீஸ், அமர்தியா சென் | தமிழில்: பேரா. பொன்னுராஜ் | ரூ.80/- | பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை,தேனாம்பேட்டை, சென்னை - 600 018 | தொலைபேசி: 044 24332924
கல்வி நம் உரிமை
மக்கள், மொழிகள், பண்பாடுகள் என அத்தனையிலும் பன்மைத்துவமும் ஏற்ற இறக்கமும் கொண்ட தேசத்தில் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருவது என்பது தவறான கொள்கை. இதைச் சுட்டிக்காட்டிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரக் கோரும் மாநாடு சென்னையில் 2011-ல் நடத்தப்பட்டது. அதன் புத்தக வடிவமே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’
‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ | தொகுப்பாசிரியர்: கி. வீரமணி | திராவிடக் கழக (இயக்க) வெளியீடு | ரூ.50/- | பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007 | தொடர்புக்கு: 044- 26618161
மாறிவரும் கொள்கை!
மக்கள் சேவை என்ற நிலையில் இருந்து லாபம் ஈட்டும் பண்டம் என்ற நிலைக்குக் கல்வி தள்ளப்பட்டதற்குப் பின்னால் உள்ள சமூக-பொருளாதார அரசியலை 1986 முதல் 2016 வரை வெளியிடப்பட்ட நான்கு அறிக்கைகளைக்கொண்டு அலசும் புத்தகம், ‘இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986-2016’. கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசு வெளியிட்ட கல்விக் கொள்கைகள் குறித்து விமர்சித்து நூல்களை எழுதிவரும் மூத்த கல்வியாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸின் மற்றுமொரு முத்திரை.
இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் 1986-2016 | அ.மார்க்ஸ் | ரூ.240/- | அடையாளம் வெளியீடு | 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் – 621310 | தொலைபேசி: 04332 2734444
குரங்கிலிருந்தா?
மனிதப் பரிணாமம் குறித்து ஏராளமான புத்தகங்கள் இதுவரை வந்திருந்தாலும் காலத்துக்குத் தேவையான விவாதங்களுடன், ஆய்வு நிரூபணங்களுடன் எளிய மொழி நடையில் முனைவர்.சு.தினகரன் எழுதி இருக்கும் நூல்தான், ‘மனிதனாய் ஆன கதை’. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள்வரை பலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘அறிவியல் வெளியீடு’ இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
‘மனிதனாய் ஆன கதை’ | முனைவர்.சு.தினகரன் | அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் | ரூ.40/- | 245, (ப.எண்:130-3), அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை - 600 086 | தொடர்புக்கு: 044-28113630
உயர்கல்விக்கு ஆபத்தா?
இந்திய உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் நடவடிக்கைகளில் ஒன்று பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (Higher Education Commission of India - HEI) என்ற புதிய கல்விக் கழகத்தை நிறுவும் மத்திய அரசின் முடிவு. இதற்கான முன்வரைவை ஆழமாகப் பரிசீலித்த கல்வி மீது அக்கறை கொண்ட தனிநபர்களும் அமைப்புகளும் எழுதிய கடிதங்கள், கட்டுரைகளின் தொகுப்பு ‘கல்வி: சந்தைக்கான சரக்கல்ல’ என்ற புத்தகம். முனைவர் ச.சீ. ராஜகோபாலன், வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டவர்கள் எழுதிய கடிதங்கள், தீர்மானங்கள், கட்டுரைகளைக் (தமிழ் – 9, ஆங்கிலம் - 4) கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொகுத்து இருக்கிறார்.
கல்வி: சந்தைக்கான சரக்கல்ல | தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு | பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018 | தொலைபேசி: 044-24332924
படித்துச் சிரி, சிரித்துப் படி
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடி இணைப்பிதழில் வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது.
எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே இரண்டு புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி அண்மையில் வெளியானது. சிரித்து, ரசித்துப் படித்தபடியே உங்களுடைய ஆங்கில அறிவை மேருகேற்றக் கைகொடுக்கும் கையேடு இது.
ஆங்கிலம் அறிவோமே!-பாகம் III | ஜி.எஸ்.எஸ். ரூ.140/ | ‘தி இந்து’ வெளியீடு, அலைபேசி: 98431 31323
உயிரோட்டமான கல்வி
வாசித்தல், மனப்பாடம் செய்து எழுதுதல், கணிதத் திறன் இவற்றுக்கு அப்பாற்பட்ட பன்முக அறிவுத் திறன்கள் இருக்கின்றன. மொழித் திறன், தர்க்கம் மற்றும் கணிதத் திறன், காட்சித் திறன், உடல் மற்றும் விளையாட்டுத் திறன், இசைத் திறன், மனிதத் தொடர்புத் திறன், தன்னிலை அறியும் திறன், இயற்கைத் திறன், வாழ்விருப்பு சார்ந்த திறன் என 9 விதமான திறன்களை ம. சுசித்ரா இந்து தமிழ் நாளிதழின் ‘வெற்றி கொடி’ இணைப்பிதழில் தொடராக எழுதினார். ஏ. ஆர். ரஹ்மான் தொடங்கிச் சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாயின் வாழ்க்கை வரை பன்முகத் திறன்கள் சார்ந்து இப்புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம் | ம.சுசித்ரா | ரூ.150/- | தமிழ் திசை வெளியீடு | அலைபேசி: 7401296562