Last Updated : 04 Dec, 2018 10:57 AM

 

Published : 04 Dec 2018 10:57 AM
Last Updated : 04 Dec 2018 10:57 AM

உலகம் 2018

அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பண்பாட்டுத் தளங்களில் வரலாறு காணாத நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது 2018-ம் ஆண்டு. உலக நாடுகளில் இந்த ஆண்டு நிகழ்ந்த முக்கியச் சம்பவங்கள் குறித்த ஒரு பார்வை…

புதிய தலைவர்கள்

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு உட்படப் பல நாடுகளில் புதிய பிரதமர்களும் அதிபர்களும் சமீபத்தில் பதவி ஏற்றிருக்கிறார்கள்.

> சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் தலைவரான கே.பி. ஷர்மா ஒளி நேபாளத்தின் 41-வது பிரதமராக பிப்ரவரி 15 அன்று பதவியேற்றார். ஏற்கெனவே அக்டோபர் 2015 முதல் ஆகஸ்ட் 2016 வரை நேபாளத்தின் பிரதமராக இவர் பதவிவகித்திருக்கிறார்.

> ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அதிபராக இருந்த விளாடிமிர் புதின் 76 சதவீத வாக்குகள் பெற்று நான்காவது முறையாக ரஷ்ய அதிபராக மார்ச் 18 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

> தென் ஆப்பிரிக்கா வின் அதிபராக 9 ஆண்டுகள் பதவி வகித்த ஜேக்கப் ஜூமா, ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பிப்ரவரி 14 அன்று ராஜினாமா செய்தார். அதை அடுத்து துணை அதிபர் சிரில் ரமஃபோஸா தென் ஆப்பிரிக்காவின் புதிய அதிப ராக பிப்ரவரி 15 அன்று பதவியேற்றார்.

> கியூபா நாட்டின் புதிய அதிபராக மிகேல் டியஸ் கானெல் ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் கியூபாவை 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

> மலேசியாவின் ‘பாகட்டன் ஹராப்பன்’ கட்சியைச் சேர்ந்த வரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான மஹாதீர் பின் முஹமது 92 வயதில் மீண்டும் மே 10 அன்று அந்நாட்டின் பிரதமரானார்.

> ஜிம்பாப்வேயின் ஆளும் கட்சியான ஜனு பி.எப். தலைவர்  எமர்சன் நங்கக்வா மீண்டும் அந்நாட்டின் அதிபராக ஜூலை 31 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

> பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக ஆகஸ்ட் 18 அன்று பதவியேற்றார். பி.டி.ஐ. கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் ஆரிப் அல்வி பாகிஸ்தானின் 13-வது அதிபராக செப்டம்பர் 9 அன்று பதவியேற்றார்.

> மாலத்தீவு ஜன நாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் இப்ராஹிம் முகமது சாலி செப்டம்பர் 23 அன்று அதிபராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

> இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அக்டோபர் 26 அன்று அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆனால், அந்நாட்டு நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் ராஜபக்ச தோல்வி அடைந்தார்.

இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ஏற்க சிறிசேனா மறுத்துவிட்டார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி தயார் என்று நவம்பர் 30 அன்று அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

brexitjpgright

இங்கிலாந்தின் தலையெழுத்து பிரெக்ஸிட்

ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவது தொடர்பாக 2016 முதல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ‘பிரெக்ஸிட்’ என்றழைக்கப்படுகிறது. இது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தத்தை நவம்பரில் ஐரோப்பியக் கூட்டமைப்பும் இங்கிலாந்தும் கூட்டாக வெளியிட்டன.

டிசம்பரில் இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின் முடிவுதான் அந்நாட்டு பிரதமர் தெரசா மேயின் ஆட்சியை முடிவு செய்யும் என்று சொல்லப்படுகிறது. 2016-ல் பிரெக்ஸிட்டில் (உடன்பாடு கொண்டவர்கள் 51.89%, உடன்பாடு இல்லாதவர்கள்: 48.11%) உடன்பாடு இல்லாத காரணத்தால் அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். அதைத் தொடர்ந்தே தெரசா மே அந்நாட்டின் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஃபேஸ்புக் தகவல் திருட்டு

லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா  என்ற இணைய நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்புக்காகப் பணியாற்றி சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் பேஸ்புக் விவரங்களைத் திருடியதாக மார்ச் 20 அன்று குற்றச்சாட்டு எழுந்தது. ஃபேஸ்புக் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களுடைய தகவல்களைத் திருடியதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார்.

இதை அடுத்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் அதன் தலைமைச் செயலதிகாரி அலெக்சாண்டர் நிக்ஸைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் இந்தியாவிலும் 2014 தேர்தலின்போது தீவிரமாகப் பணியாற்றி இருக்கிறது என்று இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய கிறிஸ்டோஃபர் வைல் தெரிவித்தார்.


டிரம்ப் - கிம் - மூன்: மோதலும் சந்திப்பும்

சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்தபோதிலும் தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்திவந்தது வட கொரியா. இதனால் 2018 புத்தாண்டு தினத்திலிருந்தே அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் மோதல் வலுத்தது. இந்நிலையில் அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தப்போவதாக ஏப்ரல் 21 அன்று கிம் ஜாங்-உன் அறிவித்தார்.

இதை அமெரிக்காவும் தென் கொரியாவும் வரவேற்றன. குறிப்பாக, 1953-ல் நிறைவடைந்த கொரிய போருக்குப் பிறகு தென் கொரிய எல்லைக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற வட கொரிய அதிபர் என்ற பெருமையை ஏப்ரல் 27 அன்று கிம் ஜாங்-உன் பெற்றார்.

நிரந்தர சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்துதல், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்குதல் உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தை தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன்னுக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுக்குமிடையே நடைபெற்றது. இதன் முத்தாய்ப்பாக சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் ஜூன் 12 அன்று நடந்த உச்சிமாநாட்டில் டிரம்பும் கிம்மும் சந்தித்து பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.

syriajpg

சிரியா: போராக மாறிய போராட்டம்

வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், அரசியல் ஒடுக்குமுறை உள்ளிட்டவை சிரியா அதிபர் பஹார் அல் அசாத்தின் ஆட்சியில் தலைதூக்கின. இவற்றை எதிர்த்து சிரியாவின் டேர்ரா நகரில் 2011-ல் அந்நாட்டு மக்கள் தொடங்கிய அமைதிப் போராட்டம் உள்நாட்டுப் போராக மூண்டது. பொதுமக்கள் ஐ.எஸ். உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தனர்.

இதனால் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிரிய மக்களை சிரிய அரசு ராணுவம் கொன்றிருக்கிறது; 56 லட்சம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா. இதில் கடந்த மார்ச் மாதம் சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் ஒரே வாரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். அவர்களில் பெரும் பாலோர் குழந்தைகள்.

 

உலகம் வியந்த மீட்புப் பணி

தங்களது பயிற்சியாளருடன் தாய்லாந்து கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர் அந்நாட்டின் மா சே நகரில் உள்ள  10 கீ.மீ. தாம் லுவாங் குகைக்குள் ஜூன் 23 அன்று சென்றனர். அன்று  பலத்த மழை பெய்ததால் குகைப் பகுதி முழுவதையும் வெள்ள நீர் சூழ அனைவரும் குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் குகைக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொண்டு சென்ற தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் மேற்கொண்ட பணிகள் மூலம் பத்து நாட்களுக்குப் பிறகு ஜூலை 3 அன்று அனைவரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், மீட்புப் பணியின்போது தாய்லாந்து சீல் படையைச் சேர்ந்த ஒரு வீரர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார்.

அக்கம் பக்கம் 

# ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஊழலுக்கு எதிரான நீதிமன்றம், ஜூலை 6 அன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
# ஈரானுடன் 2015-ல் ஏற்படுத்திக் கொண்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக மே 8 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
# இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனம் செய்யும் புதிய சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜூலை 19 அன்று நிறைவேற்றப்பட்டது.
# இந்தியா-ரஷ்யா இடையே ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 5 அன்று டெல்லியில் கையெழுத்தானது.  
# ‘அகடமிக் லமோனோசவ்’ என்ற உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் ரஷ்யாவில் மே 19 அன்று திறக்கப்பட்டது.
# உலகில் வாழ்வதற்குத் தகுதியான நகரங்களில் முதல் இடத்தை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா பிடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x