

ஒருநாள் அக்காவின் கணவர் அகமது ஜலாலுதீனுடன் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார் கலாம். அப்போது வானில் பறவைகள் பறந்துகொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தவர், ‘இந்தப் பறவைகள் எப்படிப் பறக்கின்றன?’ என்று கேட்டார். ‘பறவைகள் என்ன, மனிதனே இப்போது விமானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டான்.
உங்க அண்ணன் சம்சுதீன் செய்தித்தாள் முகவர். அவரிடம் கேட்டு, தினமும் செய்தித்தாள் படி. நம்ம மாணிக்கத்தின் நூலகத்துக்குப் போனால், நிறைய புத்தகங்கள் இருக்கும். அவற்றை எல்லாம் படித்தால் உன் அறிவு விரிவாகும்’ என்றார் ஜலாலுதீன். அன்றிலிருந்து பாடக் கல்வி அல்லாத பிறவற்றையும் படிக்க ஆரம்பித்தார் கலாம்.
கலாமுக்கு வழிகாட்டியவர்! - உலகத்துக்கே ‘கனவு’ காணச் சொல்லி வழிகாட்டிய கலாமை, கனவு காணச் சொன்னவர் அவரின் ஆசிரியர் துரை சாலமன். ‘எல்லாவற்றுக்கும் ஆசைப்படு. ஆசை நிறைவேற கனவு காண். கனவு நிறைவேற நம்பிக்கையோடு முயற்சி செய். நம்பிக்கையோடு கடினமாக உழைத்தால் நீ ரொம்பப் பெரிய இடத்துக்குச் செல்வாய்’ என்று கலாமிடம் சொன்னார். வெற்றியின் ரகசியம் இதுதான் என்பதைப் புரிந்துகொண்டார் கலாம்.
விமானமும் கலாமும்: கலாம் வளர, வளர விமானம் தொடர்பான ஆர்வமும் வளர்ந்துகொண் டிருந்தது. சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் கலாம் எழுதிய ‘ஆகாய விமானம் கட்டுவோம்’ என்கிற கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது! கலாமும் அவர் நண்பர்களும் சேர்ந்து தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
அதைப் பார்வையிட வந்த பேராசிரியர் ஸ்ரீநிவாசன், ‘இந்நேரம் எல்லா வேலைகளும் முடிந்திருக்க வேண்டும்’ என்றார். கலாம் குழுவினர் ஒரு மாதத்தில் முடித்துவிடுவதாகச் சொன்னார்கள். ஆனால், அவரோ மூன்றே நாள்களில் முடிக்க வேண்டும், இல்லை என்றால் உதவித்தொகை நிறுத்தப்படும் என்றார். கலாமும் நண்பர்களும் இரவு, பகல் பாராமல் உழைத்தனர். கிளைடர் என்கிற இன்ஜின் இல்லாத விமானத்தை வடிவமைத்தனர். பேராசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.
| அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள் |