தமிழகத்தில் மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழகத்தில் மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் - சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

மனம், உடல், சமூக ரீதியான இடையூறுகளில் இருந்து பள்ளி மாணவிகளைப் பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நாளை (ஆக. 9) தொடங்கிவைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை நாளை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், செல்போன் பயன்படுத்துவதன் மூலமாக இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது, அவருக்கு கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர்.

மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை காண்பர். இதற்கான விழிப்புணர்வு கையேடும் வழங்கப்படும். அந்த கையேட்டில் பிரச்சினைகளை தீர்க்கும் முறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக செல்போன், இணையதள பயன்பாட்டாலும் மாணவ- மாணவிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அரசு தொடங்கவுள்ள இத்திட்டம் மாணவிகளுக்கு மனம், உடல் மற்றும் சமூக ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும். இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கி உள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in