ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 89 உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்

ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 89 உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்
Updated on
1 min read

சென்னை: நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 உயர் கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நம் நாட்டில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் பல்கலைக் கழக மானியக் குழுவால் (யுஜிசி) வகுக்கப்பட்டு 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு வழிமுறைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் தங்கள் வளாகங்களில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், காலத்துக்கேற்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களையும் ஆண்டுதோறும் யுஜிசி வழங்கி வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு தற்போது யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக் கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் ஆகிய 5 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, சம்மந்தப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘யுஜிசி பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாதது கவனத்துக்கு வந்துள்ளன. யுஜிசியின் ராகிங் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாகும். இதை செய்ய தவறுவது விதிமீறல் என்பதையும் தாண்டி மாணவர் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும். இதையடுத்து, இந்தக் கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் கல்லூரிகள் தங்கள் வளாகத்துக்குள் ராகிங் செய்வதை தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்.

இதனை மீறினால் யுஜிசி நிதியுதவியை திரும்பப் பெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்தல் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்வதில் யுஜிசி உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும்’ என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in