கல்லூரிகளுக்கான தன்னாட்சி விவகாரம்: யுஜிசி அறிவுறுத்தல்

கல்லூரிகளுக்கான தன்னாட்சி விவகாரம்: யுஜிசி அறிவுறுத்தல்
Updated on
1 min read

தன்னாட்சி அங்கீகாரம் தொடர்பான விதிகளுக்குட்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் சமூக ஈடுபாட்டுடன் கூடிய திட்டங்களை வழங்க தேசிய கல்விக் கொள்கை-2020 வலியுறுத்துகிறது. அதன்படி கல்லூரிகளின் தன்னாட்சி நிலை மற்றும் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும்போது அதற்கான கருத்துருக்களை பல்கலைக்கழகங்களிடம் இருந்து யுஜிசி கேட்டு பெறுவது வழக்கம். ஆனால், பல்வேறு பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதற்கான இணைப்பு கல்லூரிகளின் விண்ணப்பங்களை செயலாக்குவதில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக யுஜிசி தளத்தில் எந்த பதிலும் அளிக்கப்படுவதில்லை.

அதேபோல், யுஜிசியால் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னும் அதுகுறித்து தகவல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தாமதமாக சென்று சேருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதனால் பாடத்திட்டங்களை வடிவமைத்தல், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான முறைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதில் தன்னாட்சி கல்லூரிகளுக்கு இடர்பாடுகள் உள்ளன. எனவே, தன்னாட்சி அங்கீகாரம் தொடர்பான யுஜிசி விதிகளுக்குட்பட்டு பல்கலைக்கழகங்கள் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in