தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வை தடுக்க அவசரச் சட்டம் - டெல்லி அரசு நடவடிக்கை

டெல்லி முதல்வர் ரேகா குப்தா
டெல்லி முதல்வர் ரேகா குப்தா
Updated on
1 min read

புதுடெல்லி: தனியார் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த டெல்லி அரசு ஒரு அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் ஒரு வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைத் தடுக்க டெல்லி அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. ‘டெல்லி பள்ளிக் கல்வி மசோதா - 2025’ன் கீழ் முன்மொழியப்பட்ட அவசரச் சட்டத்தின் வரைவு ஏற்கெனவே சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அவசரச் சட்டம் தனியார் பள்ளிகளின் விதிமீறல்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்க முன்மொழிகிறது. மேலும் மீண்டும் மீண்டும் விதிகள் மீறப்பட்டால், பள்ளி சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிக்க பள்ளி, மாவட்டம் மற்றும் மறுஆய்வு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்படும். இந்த மசோதா வரவிருக்கும் மழைக்கால அமர்வில் ஒரு மசோதாவாக அறிமுகப்படுத்தப்படும்.

தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வு பிரச்சினை குறித்து பேசிய டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், "நாங்கள் ஒரு வலுவான ஆவண அமைப்பை உருவாக்குவோம். கடந்த காலங்களில் தன்னிச்சையான கட்டண உயர்வுகள் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டன, முந்தைய அரசாங்கத்தில் ஏதேனும் ஊழல் நடந்ததா என்பதை நாங்கள் விசாரிப்போம். எந்த சூழ்நிலையிலும் இதுபோன்ற எந்தவொரு முறைகேட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.

முன்னதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா, தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வுகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களைத் துன்புறுத்துவது பொறுத்துக் கொள்ளப்படாது என்று அறிவித்துள்ளார். இதைக் கருத்தில் கொண்டு, தன்னிச்சையான கட்டண உயர்வைத் தடுக்க இந்த அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 16ம் தேதி, தன்னிச்சையான கட்டண உயர்வு குறித்து 10 பள்ளிகளுக்கும், தணிக்கை அறிக்கைகளை சமர்ப்பிக்காத பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போதைய டெல்லி அரசு ஏற்கனவே 600 பள்ளிகளிடமிருந்து தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in