ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐஐடியில் பிடெக் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் படிப்பு

ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐஐடியில் பிடெக் ஏஐ, டேட்டா அனலிட்டிக்ஸ் படிப்பு
Updated on
1 min read

சென்னை: ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிடெக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பட்டப்படிப்பில் சேரலாம் என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிப்படை ஆராய்ச்சி முதல் உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பயன்பாட்டு துறைகள் வரை பல தரப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு சென்னை ஐஐடியில் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பட்டப்படிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த பிடெக் படிப்பில் சேரலாம். ஐஐடி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் இப்படிப்புக்கான கோடு எண் 4121 ஆகும். மாணவர்கள் இந்த பிடெக் படிப்பை தேர்வுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிடெக் ஏஐ மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் படிப்பின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறும்போது, "ஏஐ மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் துறை தற்போது மிகவேமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறை ஆகும். இதை கருத்தில்கொண்டு தொழில்துறை மற்றும் ஆராய்ச்சித் துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பிடெக் படிப்புக்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சுவாரசியமான சவால்கள் நம் முன் நின்றுகொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்த பிடெக் படிப்பு ஏஐ துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை அமைக்க ஒரு வரப்பிரசாதமாக அமையும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in