ஐஐடி கனவும், ஜேஇஇ நுழைவுத் தேர்வும் - ஒரு விரைவுப் பார்வை

ஐஐடி கனவும், ஜேஇஇ நுழைவுத் தேர்வும் - ஒரு விரைவுப் பார்வை
Updated on
1 min read

நாடு முழுவதும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு தான் ‘ஜேஇஇ’ எனும் ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்‌சாமினேஷன்’. மத்திய கல்வி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட என்டிஏ எனும் தேசிய தேர்வு முகமை, கடந்த 2019ம் ஆண்டு முதல் தேர்வை நடத்தி வருகிறது.

ஜேஇஇ-யில் மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என 2 கட்ட தேர்வுகள் இடம் பெற்றுள்ளன. மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியும். என்ஐடி, ஐஐடி, மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநில அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்தத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

என்.ஐ.டி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ மெயின் அடிப்படையிலும், ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஜேஇஇ அட்வான்ஸ் டு தேர்வு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல், உயிரி தொழில் நுட்பம், தொழில்நுட்ப தொழிற்கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படித்திருக்க வேண்டும். குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வில் மாணவர் பெறும் அதிக மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் வரை, இத்தேர்வு எழுதலாம்.

ஜேஇஇ மெயின் தேர்வில் மொத்தம் 2 தாள்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் கேள்விகள் இடம் பெறுகின்றன. கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து மொத்தம் 75 கேள்விகள் கேட்கப்படும். பி.ஆர்க் படிப்புக்கான தாள் 2ஏ தேர்வில் 77 கேள்விகளும், பி.பிளானிங் படிப்புகான தேர்வில் 2பி தேர்வில் 100 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

ஐஐடி-யில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது பலரின் ஏகோபித்த கனவு. அதற்கு இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வை சிறப்பாக எழுதுபவர்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்குள் நுழைந்து தங்கள் கனவை நிறைவேற்றுகிறார்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in