நாடு முழுவதும் 9.92 லட்சம் பேர் எழுதிய ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு 

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நம்நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 12.58 லட்சம் பேர் வரை எழுதினர். இதன் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம்கட்ட தேர்வு ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 531 மையங்களில் 9 லட்சத்து92,350 மாணவர்கள் எழுதினர்.

அதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.19) வெளியானது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறியலாம். இந்த தேர்வில் மொத்தம் 10 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவர் எஸ்.பிரதீஷ் காந்தி 99.99% மதிப்பெண் பெற்றுள்ளார்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இவ்விரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் அடுத்தகட்ட ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு கணக்கில் கொள்ளப்படும். பிரதானத் தேர்வு மே 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் ஏப்ரல் 23-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in