

சென்னை: உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அறிமுக வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தீக் ஷாரம்பம் எனும் பெயரில் மாணவர்களுக்கான உயர்கல்வி அறிமுக வழிகாட்டுதல் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை நிறைவு செய்துவிட்டு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் புதிய சூழலை அனுசரித்துச் செல்லும் வகையில் இத்திட்டத்தை யுஜிசி நடைமுறைபடுத்தி வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்கவுள்ளன. அதை கருத்தில் கொண்டு தங்களது உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு தீக் ஷாரம்பம் திட்டத்தின் கீழ் அறிமுக வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும். மேலும், அதுதொடர்பான புகைப்படங்கள், சான்றுகளை யுஜிசி வலைத்தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.