

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ம் தேதியை முன்னிட்டு, அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.
இதையடுத்து உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். இதுதவிர, ஊழல் தடுப்பு குறித்த கருத்தரங்கம், பட்டிமன்றம், விநாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொகுத்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்கள் யுஜிசியின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.