என்ஐஆர்எஃப் தரவரிசை 2024: இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்!

என்ஐஆர்எஃப் தரவரிசை 2024: இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்!
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய அங்கீகார வாரியம் (என்பிஏ) மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) நடத்திய தரவரிசையில் சென்னை ஐஐடி நாட்டின் ஒட்டுமொத்தப் பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி-யைத் தொடர்ந்து, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) - பெங்களூரு மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

ஆராய்ச்சிப் பிரிவுக்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் பிரிவிலும் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

மேலாண்மை பிரிவில் அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) முதல் இடத்தையும், ஐஐஎம் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், ஐஐஎம் கோழிக்கோடு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. பொறியியல் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. சிறந்த சட்ட நிறுவனம் பிரிவில் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், பல் மருத்துவப் பிரிவில் சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்தையும் பிடித்துள்ளன. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த மாநில பொது பல்கலைக்கழகமாக தேர்வாகி உள்ளது. இரண்டாவது இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஜாதவாபூர் பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தை புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) சிறந்த திறந்தநிலை பல்கலைக்கழகமாகவும், புனேவில் உள்ள சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் சிறந்த திறன் பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in