புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5.33 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி: பள்ளிக் கல்வித் துறை ரூ.2.90 கோடி விடுவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எழுதப் படிக்கத் தெரியாத 5.33 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி வழங்குவதற்காக முதல் கட்ட தவணை தொகையாக ரூ.2.90 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் "புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்" 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2024-25-ம் ஆண்டில் எழுதப் படிக்கத் தெரியாத 5 லட்சத்து 33,100 கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டம் சார்ந்து நிகழ் நிதியாண்டுக்குரிய 50 சதவீத முதல் தவணை நிதியாக 2 கோடியே 90 லட்சத்து 43,302 ரூபாய் மாநில அரசால் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்குரிய செலவின வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்தந்த தலைப்புகளுக்குரிய நிதி ஒதுக்கீடு, செயல்பாடுகளின் அடிப்படையில் திட்ட விதிகளைப் பின்பற்றி வரும் ஆக.30-ம் தேதிக்குள் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். அந்த செலவினங்களுக்கான பயன்பாட்டுச் சான்றிதழில் முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்டு இவ்வியக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பள்ளிக் கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in