

சென்னை: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் நடப்பாண்டு 4.80 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வியை பயிற்றுவிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டம் கடந்த கல்வியாண்டு (2022-23) அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5.28 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடப்பாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் மு.பழனிசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் (2023-24) தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி திட்டத்தை வரும் செப்டம்பர் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் 6 மாதங்களுக்கு 200 மணி நேரம் தன்னார்வலர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற வேண்டும். அதன்படி 15 வயதுக்கும் மேலான எழுத படிக்க தெரியாதவர்களை கண்டறிதல், தன்னார்வலர்கள் நியமனம் உட்பட பணிகளை இந்த மாதத்தின் 3-வது வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.
கற்போர்களுக்கு பயிற்சியின் இறுதியில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு தேவையான பணிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.