ஓட்டப்பிடாரம் அருகே நடைபாதை அடைக்கப்பட்டதால் 10 நாட்களாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே நடைபாதை அடைக்கப்பட்டதால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் அவதிப்படுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், மேல அரசடி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவேலாயுதபுரத்தைச் சேர்ந்த குழந்தைகளின் ஆரம்பக் கல்வித் தேவைக்காக, இக்கிராமத்தின் அருகில் உள்ள வேலாயுதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிக்குச் செல்லும் கீழவேலாயுதபுரம் கிராமக் குழந்தைகள், நீண்ட காலமாக குறிப்பிட்ட நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த நடைபாதை அடைக்கப்பட்டதால், கடந்த 10 நாட்களாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது தடைபட்டுள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கீழவேலாயுதபுரத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் பெற்றோருடன் வந்து ஆட்சியர் கோ.லட்சுமிபதியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் கிராமத்தில் இருந்துவேலாயுதபுரத்துக்கு செல்லும் நடைபாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அடைத்துவிட்டார். இதனால் கடந்த 11-ம் தேதி முதல் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், வேலாயுதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
