ஈரோட்டில் தரம் உயர்த்தப்படாத மலை கிராம அரசு பள்ளிகள்: பழங்குடியின மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொங்காடை மலைக் கிராமத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி வளாகம்.
ஈரோடு மாவட்டத்தில் கொங்காடை மலைக் கிராமத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளி வளாகம்.
Updated on
2 min read

ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் செயல்படும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த பங்களிப்புத் தொகை செலுத்தி 11 ஆண்டுகளாகியும், இதுவரை நடவடிக்கை இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் ஊராட்சியில் கோட்டாடை மலைக் கிராமம் அமைந்துள்ளது. இதையொட்டி குழியாடா, ஒசட்டி, உப்பட்டி, புதுக்காடு, சோக்கிதொட்டி, கல்கூசி, பீமரதொட்டி, தேவர்நத்தம், அட்டப்பாடி, சீகட்டி, கீள்மாவள்ளம், மேல்மாவள்ளம் என 10-க்கும்மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளன.

1961-ல் கோட்டாடையில் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளி, 1996-ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தற்போது 70 மாணவர்கள் பயில்கின்றனர். அருகில் உள்ள தேவர்நத்தம், மாவள்ளம் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் அமைந்துள்ளன.

கோட்டாடை பள்ளியில் 8-ம் வகுப்பு நிறைவு செய்தவர்கள் 9-ம்வகுப்புக்கு செல்ல 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும்.

பேருந்து வசதி இல்லை: கோட்டாடை பகுதியில் இருந்து ஆசனூர் பள்ளிக்கு 60 மாணவ, மாணவிகள் தினமும் பேருந்தில் செல்கின்றனர். உரிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் பலர் 8-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்துகின்றனர். குழந்தை திருமணங்கள் நடக்கவும் இந்தப் பிரச்சினை அடிப்படைக் காரணமாக உள்ளது.

கோட்டாடை அரசுப் பள்ளி வளாகத்தில் மரத்தடியில் பயிலும் மாணவ, மாணவிகள்.
கோட்டாடை அரசுப் பள்ளி வளாகத்தில் மரத்தடியில் பயிலும் மாணவ, மாணவிகள்.

இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென்று கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, 2013-ல் பொதுமக்களின் பங்களிப்புத் தொகையாக ரூ. 1 லட்சம் செலுத்துமாறு அரசு தெரிவித்தது. இதன்படி, கிராம மக்கள் பணத்தைதிரட்டி அரசுக்குச் செலுத்தினர். 11 ஆண்டுகளாகியும் பள்ளி தரம்உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதேபோல, சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 121 மாணவர்கள் பயிலும் பவளக்குட்டை நடுநிலைப் பள்ளி, 116 மாணவர்கள் பயிலும் கரளயம் நடுநிலைப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவும் பொதுமக்கள் ரூ.1 லட்சம் பங்களிப்புத் தொகைசெலுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் 156 மாணவர்கள் பயிலும் கொங்காடை உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாகவும், சோளகனை, கத்திரிமலை, குட்டையூர் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாகவும் உயர்த்த திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு, பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்ட மலைக் கிராம மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளை தரம் உயர்த்தி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென மலைக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in