தமிழகத்தில் 175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: அரசு உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 175 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு ஜூன் முதல் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு நிதியுதவி பெறும் 193 தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 6,006 குழந்தைகளுக்கு இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.15 லட்சத்து 36 ஆயிரத்து 300 நிர்வாக ஒப்பளிப்பும், 2023-24-ம் நிதியாண்டுக்கு 4 மாதங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினத்தொகை ரூ.9 லட்சத்து 300 நிதி ஒப்பளிப்பும் செய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கடந்த ஆண்டு டிச.22-ம் தேதி அனுமதி ஆணை பிறப்பித்தது.

மேலும், இத்திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்துவதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்காக வழிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதையடுத்து, அரசு நிதி உதவி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் இணைத்து, பயனாளிகளின் எண்ணிக்கையை மறுநிர்ணயம் செய்து, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க தக்க நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்களுக்கு (சத்துணவு) உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மதிய உணவு தேவைப்படும் சிறப்புப்பள்ளிகளின் விவரம், மாணவர்களின் எண்ணிக்கை விவரம் மற்றும் சிறப்புப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியின் விவரத்தை சேகரித்துக்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த மாணவர்களுக்கு மதிய உணவு, அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்கள் சமூகநலத்துறைக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in