அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கால்பந்தாட்ட பயிற்சி: கிருஷ்ணகிரியில் 255 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இலவச கால்பந்தாட்ட பயிற்சி பெறும் மாணவர்கள்
கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இலவச கால்பந்தாட்ட பயிற்சி பெறும் மாணவர்கள்
Updated on
2 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 255 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கால்பந்தாட்டக் குழு மற்றும் அரிமா சங்கம் சார்பில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் 190 மாணவர்கள், 65 மாணவிகள் உட்பட 255 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

முன்னாள் மாணவர்களின் முயற்சி... - இப்பயிற்சியை, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களும், கால்பந்தாட்ட வீரர்களான மதியழகன், பாலு.கே.கோபால், சரவணன், ராமநாதன், சண்முகம், பிரபாகரன், ஜெயபிரகாஷ், சுப்பிரமணி மற்றும் சிலர் இணைந்து கிருஷ்ணகிரி கால்பந்தாட்ட குழு என்கிற அமைப்பை தொடங்கி இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து இக்குழுவின் தலைவர் மதியழகன் கூறும்போது, “நாங்கள் படித்த காலத்தில் கிரிக்கெட்டைவிட கால்பந்தாட்டத்தின் மீது அன்றைய காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆர்வம் இருந்தது. கிருஷ்ணகிரியில் நடத்தப்படும் கால்பந்தாட்ட போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து அணிகள் பங்கேற்கும். ஆனால் காலப்போக்கில், கிரிக்கெட் மீதான மோகம் அதிகரித்தன் காரணமாக கால்பந்தாட்டம் மீது மாணவ, மாணவிகளுக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.

இதேபோல் விடுமுறை நாட்களில் மாணவ, மாணவிகள் மைதானத்தில் வந்து விளையாடாமல், செல்போனில் விளையாடி கொண்டு தங்களது உடல்திறனை வளர்த்துக் கொள்வதில்லை. கால்பந்தாட்டம் என்பது உடல்திறன் விளையாட்டு ஆகும்.தற்போதைய சூழ்நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி, பயிற்சியாளர்கள் மூலம் கால்பந்தாட்ட பயிற்சி பெறும் நிலையில், கிராமபுற அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டக்கனியாக உள்ளது. இதன் காரணமாகவே, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவச கால்பந்தாட்ட பயிற்சியை அளித்து வருகிறோம்.

மேலும், சென்னை, பெங்களூரை சேர்ந்த 14 பயிற்சியாளர்கள் மூலம் அடிப்படை கால்பந்தாட்டம், உடல்திறன் பயிற்சிகள் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், பயற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் காலை உணவு, மாலை பால், பிஸ்கெட் உள்ளிட்டவை இலவசமாக வழங்குகிறோம். இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு உடல்திறன், மனத்திறன் மேம்படுகிறது. தற்போது 20 நாட்கள் பயிற்சி அளித்து சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அரசு பள்ளி மணாவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது”, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in