ரூ.2.5 லட்சம் சம்பளம், டி.என்.சேஷன் உத்வேகம்... - யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற ஆதித்யா பின்னணி
சென்னை: ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை யுபிஎஸ்சி வெளியாகிவிட்டது. 1,016 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 3 இடங்களையும் மாணவர்களே பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய அளவில் மாணவர் ஆதித்யா ஸ்ரீவத்ஸவா முதலிடத்தை பிடித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா லக்னோவில் பள்ளிக் கல்வியையும், கான்பூர் ஐஐடியில் பிடெக் பட்டமும் பெற்றவர்.
பிடெக் பட்டம் பெற்ற பின் பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்நிறுவனத்தில் ஆதித்யாவின் மாத சம்பளம் ரூ.2.5 லட்சம். கை நிறைய சம்பளம் கிடைத்த அந்த வேலையில் 15 மாதங்கள் பணிபுரிந்த சமயத்தில் தான் யுபிஎஸ்சி தேர்வு மீது கவனம் திரும்பியுள்ளது. அந்த வேலையில் இருந்துகொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார். முதல் முயற்சியில் தோல்வி கிடைத்தது.
ஆனால், முயற்சியை கைவிடவில்லை. மாறாக ரூ.2.5 லட்சம் சம்பளம் கிடைத்த வேலையை உதறிவிட்டு முழுநேரமாக யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகினர். அதற்கு பலனும் கிடைத்தது. இரண்டாவது முயற்சியில் தேர்வாகினார். கடந்த 2022ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில், 136வது ரேங்குடன் ஐபிஎஸ் பணியை பெற்றார்.
எனினும், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்ற இன்னொரு முறை யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சிப்பது என்று முடிவெடுத்து பயிற்சியை தொடர்ந்தார். அவர் எதிர்பார்த்தது போல் தனது மூன்றாவது முயற்சியில் அதுவும் இந்திய அளவில் முதலிடம் பெற்று ஆதித்யா ஐஏஎஸ் பதவியை சாத்தியப்படுத்தியுள்ளார்.
ஐஏஎஸ் பதவி மேல் ஏன் இவ்வளவு ஆர்வம் என்பதை தனியார் அகாடமியின் நேர்முக தேர்வு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் ஆதித்யா. அதில், "நான் வேலை செய்த தனியார் நிறுவனத்தில் பல தன்னார்வ பணிகளை முன்னின்று செய்துள்ளேன். அப்போது பெரிதாக ஆர்வம் தரும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அப்படியான ஒரு பணி தான் ஐஏஎஸ். மேலும் ஐஏஎஸ் பணியில் சமூக அந்தஸ்தும் உள்ளது.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் யாரையும் இந்த உலகம் நினைத்து பார்க்கப்போவதில்லை. ஆனால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டிஎன்.சேஷனை இன்றும் பல நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுவே ஐஏஎஸ் என்னும் என் கனவுக்கு, முடிவுக்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆதித்யாவின் தந்தை மத்திய தணிக்கைத் துறையில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றுகிறார். தற்போது ஆதித்யாவின் தங்கையும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
