யுபிஎஸ்சி தேர்வில் 64-வது இடம் பிடித்து புதுச்சேரி மருத்துவர் வினோதினி சாதனை!
புதுச்சேரி: புதுச்சேரி ஓய்வு பெற்ற ஐஜி சந்திரனின் மகளும், மருத்துவருமான வினோதினி யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 64-வது இடம் பிடித்து சாதித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்பட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படும். 2023-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பரில் நடந்தது. அதையடுத்து நடப்பாண்டு ஜனவரி தொடங்கி நேர்க்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் 1,016 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு இன்று முடிவுகள் வெளியானது.
இத்தேர்வில் புதுச்சேரி ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரனின் மகள் வினோதினி யூபிஎஸ்சி தேர்வில் 64-வது இடம் பிடித்துள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து வினோதினி கூறியது: “நான் மருத்துவராக உள்ளேன். தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறேன். திருமணமாகி குழந்தை உள்ளது.
எனது குடும்பத்தினர் குழந்தையை பார்த்துக்கொண்டனர். அத்துடன் கணவர், தந்தை, அம்மா ஆகியோர் உதவியால் யூபிஎஸ்சி படிக்க முடிந்தது. ஐந்தாவது முறையாக இம்முறை தேர்வு எழுதி 64வது இடத்தை அகில இந்திய அளவில் பிடித்துள்ளேன்.
ஐஏஎஸ் கேடர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம். கடந்த முறை 360-வது இடம் பிடித்து ரயில்வேதுறைக்கு இடம் கிடைத்தது. ஐஏஎஸ் ஆக விரும்பி மீண்டும் தேர்வு எழுதி 64-வது இடம் கிடைத்தது சந்தோஷம்.
கிடைக்கும் நேரத்தில் எல்லாம் படிப்பேன். மருத்துவராக படித்து பணியாற்றினாலும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது எனது தாத்தாவின் விருப்பம். அவர் அண்மையில் மறைந்தார். அவரது ஆசியும் எனது வெற்றிக்கு ஓர் காரணம்.
ஐஏஎஸ் ஆனால் சமூகத்தில் அனைத்து துறைகளையும் சார்ந்து பணியாற்றலாம் என்பதால் கூடுதல் விருப்பத்துடன்படித்தேன்” என்று குறிப்பிட்டார். புதுச்சேரி ஐஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரன் அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
