

கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க கிரானைட் கழிவு கொட்டப்பட்டுள்ளதால், மாணவிகள், ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி 2.15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழைக் காலத்தில் பள்ளி வளாகத்தில் குளம்போல மழை நீர் தேங்கி வந்தது. இதனால், வகுப்பறைகளுக்கு மாணவிகள், ஆசிரியர்கள் சிரமத்துடன் சென்று வந்தனர்.
கரடு முரடான கசடு: இச்சிரமத்தைப் போக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மண் கொட்டி சீரமைக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் கிரானைட் நிறுவனங்களில் பெரிய கற்களிலிருந்து கிரானைட் கல்லை இயந்திரம் மூலம் அறுக்கும்போது கல்லில் இருந்து நீக்கப்படும் கசடு கழிவுகளை கொண்டு வந்து கொட்டி சமன் செய்தனர். இந்த கசடு கழிவு கரடு முரடாக இருப்பதால், இதில் நடந்து செல்லுமபோது கால் பாதங்களைக் கசடு கழிவுகள் குத்தி காயம் ஏற்படுத்தி வருவதாக மாணவிகளின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பயன்படுத்த முடியாத மைதானம் - இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சிலர் கூறியதாவது: பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கிரானைட் கசடு கழிவு கொட்டப்பட்டுள்ளதால், மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மைதானத்திலும் கசடு கொட்டப்பட்டுள்ளதால், மாணவிகள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கசடுகளிலிருந்து காற்றில் பறக்கும் தூசி வகுப்பறை முழுவதும் படர்ந்து மாணவிகளுக்குச் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
எனவே, மாணவிகளின் நலன் கருதி கிரானைட் கசடுகளை முழுமையாக அகற்றி விட்டு மண் கொட்டி பள்ளி வளாகத்தைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.