அறிவியல் போட்டியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் @ கோவை

கோவையில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் பாட்டில்களை சுத்தம் செய்யும் இயந்திரத்தின் செயல்முறை குறித்து விளக்கிய பள்ளி மாணவி. | படங்கள்: ஜெ.மனோகரன் |
கோவையில் நடைபெற்ற அறிவியல் போட்டியில் பாட்டில்களை சுத்தம் செய்யும் இயந்திரத்தின் செயல்முறை குறித்து விளக்கிய பள்ளி மாணவி. | படங்கள்: ஜெ.மனோகரன் |
Updated on
2 min read

கோவை: கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் போட்டியில் பல புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் அசத்தினர்.

அறிவியல் ஆய்வுகளில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தேசிய புத்தாக்க ஆய்வு நிறுவனம் மற்றும் சில அரசு துறைகளுடன் இணைந்து, பள்ளி கல்வித்துறை உதவியுடன் 2009-ம் ஆண்டு முதல் ‘மானக் புத்தாக்க ஆய்வு உதவி’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2022-23-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான போட்டி கோவை, அவிநாசி சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் நடந்தது. கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 122 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல தானியங்கி முறையில் இயங்கும்<br />வேகத்தடை தொழில் நுட்பத்தை உருவாக்கிய மாணவர்கள்
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல தானியங்கி முறையில் இயங்கும்
வேகத்தடை தொழில் நுட்பத்தை உருவாக்கிய மாணவர்கள்

சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இன்று நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பது அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு வரும் நிலையில், டிரோன் மூலம் மற்றும் சூரியஒளி ஆற்றல் உதவியுடன் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை உருவாக்கியிருந்தனர்.

இருசக்கர வாகனங்கள் திருடு போவதை தடுக்கும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் யாரேனும் திருட முயன்றால் உடனடியாக உரிமையாளருக்கு மொபைல்போனில் தகவல் தெரிவிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் உருவாக்கிய மூலிகை சானிடைஸர்.
மாணவ, மாணவிகள் உருவாக்கிய மூலிகை சானிடைஸர்.

நோய்தொற்று பாதிப்பில் இருந்து மக்களை தற்காத்துக் கொள்ள உதவும் வகையில் மூலிகை செடிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைஸரும் காட்சிப்படுத்தப்பட்டது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் நோயாளிகளை அழைத்து செல்லும் போது வேகத்தடைகளால் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் தானியங்கி முறையில் வேகத்தடை உயரம் குறைக்கும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் உபகரணம் உருவாக்கப்பட்டிருந்தது.

கிராமப்புறங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் வருகை, புறப்பாடு மற்றும் இருக்கைகளின் நிலை, பேருந்து தற்போது உள்ள பகுதி என அனைத்து தகவல்களையும் மொபைல்போனில் தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் பேருந்து நிலையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அறிவியல் படைப்பும் நடுவர்களை கவர்ந்தது.

சூரியஒளி மூலம் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை<br />அகற்றும் இயந்திரத்தை உருவாக்கி<br />காட்சிப்படுத்திய மாணவி.
சூரியஒளி மூலம் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை
அகற்றும் இயந்திரத்தை உருவாக்கி
காட்சிப்படுத்திய மாணவி.

கிராமப்புற மக்களுக்கு உதவும் நோக்கத்தில் பள்ளி பருவத்திலேயே மாணவ, மாணவிகள் உருவாக்கிய அனைத்து படைப்புகளும் சமூகநலன் மீது இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

முன்னதாக இப்போட்டிகள் மண்டல அறிவியல் மையத்தின் அறிவியல் அதிகாரி (பொறுப்பு) வள்ளி தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் 10 மாணவ, மாணவிகளின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. இவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in