திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து முன்னெடுப்பில் கோட்டூரில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம்

திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து முன்னெடுப்பில் கோட்டூரில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம்
Updated on
1 min read

திருவாரூர்: திருத்துறைப் பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்துவின் முன்னெடுப்பில் கோட்டூரில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ க.மாரி முத்துவின் முயற்சியில் கோட்டூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான சோழா இலவச பயிற்சி மையம் கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படும் இப்பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பலர் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.லெனின் பாபு கூறியதாவது: கோட்டூர் தனியார் பள்ளி வளாகத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இப்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் பயிற்சி மையங்களைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

முதலில் இப்பயிற்சி மையத்தில் 206 பேர் பதிவு செய்தனர். இதில், 120 பேர் தொடர் பயிற்சி பெற்றனர். இவர்களில் குரூப் 2 முதன்மைத் தேர்வில் 5 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 பேரும் தேர்ச்சி பெற்றனர். தற்போது இங்கு 60 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து எம்எல்ஏ க.மாரிமுத்து கூறியதாவது: இப்பகுதி பெருமளவு விவசாயத் தொழிலாளர்களையும், சிறு, குறு விவசாயிகளையும் உள்ளடக்கிய தாகும். இந்தப் பகுதியிலிருந்து அரசுத் துறையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையும் சற்று குறைவு தான். இதை அதிகரிக்கும் வகையில் போட்டித் தேர்வுகளில் இளைஞர்கள் தேர்ச்சி பெறுவதற்காக இந்த இலவச பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தி வருகிறோம்.

இந்தப் பகுதி மட்டுமில்லாது, எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் இம்மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சி மையம் தொடங்கிய 2 ஆண்டுகளிலேயே குரூப் 2 முதன்மை தேர்வில் 5 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 பேரும் தேர்ச்சி பெற்றிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in