

சேலம்: சேலம் அரசுப் பள்ளி மாணவிகளின் போராட்டத்தையடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார்.
சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக தமிழ்வாணி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்து விட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மாணவிகள் புகார் கூறினர். மேலும், புகார் கூறிய மாணவிகளை தலைமை ஆசிரியை மிரட்டியதாகவும், முட்டிபோட வைத்து கொடுமை செய்ததாகவும் கூறினர்.
எனவே, தலைமை ஆசிரியர் தமிழ் வாணியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்வி அதிகாரிகள் மோகன், சந்தோஷ் குமார் மற்றும் வருவாய்த் துறையினர், போலீஸார் மாணவி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமை ஆசிரியரும் மன்னிப்பு கோரினார்.
இதனிடையே புகார் குறித்து துறை ரீதியான விசாரணை நடந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியர் தமிழ்வாணியை இளம் பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டார். மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மீது ஏற்கெனவே புகார் உள்ளது.
மேலும், பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு பக்கங்களை தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரில் தமிழ் வாணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.