

மதுரை: “தோல்வியை வெற்றியைப்போல் கடக்க பழகுங்கள், வெற்றியை தோல்வியைப்போல் கையாளப் பழகுங்கள்” என கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசினார்.
மதுரை பரவையிலுள்ள மங்கையர்க்கரசி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் 22ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி செயலாளர் பி.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.கல்லூரி பொருளாளர் ஏ.சரவணாபிரதீப் குமார், கல்லூரி இயக்குநர் ஏ.சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் உமா பாஸ்கர் வரவேற்றார்.
இவ்விழாவில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது: “வாழ்க்கையில் வெற்றி என்பது முக்கியம் என்றால் மகிழ்ச்சியும் முக்கியம். மகிழ்ச்சி ஒன்றுதான் வாழ்க்கையின் புத்துணர்ச்சியை குறையாமல் பார்த்துக்கொள்ளும். வெற்றிக்கும், மகிழ்ச்சிக்குமான வித்தியாசத்தை கண்டறியுங்கள். தோல்வியை வெற்றியைப்போல் கடக்க பழகுங்கள், வெற்றியை தோல்வியைப்போல் கையாளப்பழகுங்கள்.
விளையாட்டு என்பது தோல்வியை எளிதில் கடப்பதற்கான சிறந்த பயிற்சி என்பதால் விளையாட்டில் ஆர்வம் காட்டுங்கள். சுயமரியாதைதான் மனிதனின் அடிப்படை என்பதால் எதற்காகவும் விட்டுத்தராதீர்கள். இந்தியாவில் 25 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் 50 சதவீதம் பேர் இருக்கின்றனர். சுமார் 65 கோடி பேர் கொண்ட இளைய தலைமுறையினர் வேறு எந்த நாடுகளிலும் கிடையாது என்பதால் இந்தியாவை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன. இத்தகைய இளம் சக்திகளை அறிவியல் சிந்தனைகளோடு வளர்க்க வேண்டும். சந்திராயன், ஆதித்யா விண்கலம் அனுப்பியதில் பெண் விஞ்ஞானிகளுக்கும் முக்கிய பங்குண்டு.
மேலைநாடுகளில் பட்டம் பெறுவோருக்கு ஒரு பேனா வழங்குவார்கள். அதன்படி என் சார்பில் மாணவிகளுக்கு ஒரு பேனா வழங்குகிறேன். பேனா என்பது சிந்தனையின் வடிவம். இதற்கு முன் நீங்கள் படித்த பாடத்தை எழுதினீர்கள். இனி உங்களது சிந்தனையை எழுதுங்கள். அச்சிந்தனையின்படி செயல்படுங்கள். நல்ல சிந்தனைகள் உங்களையும் சமூகத்தையும் வழிநடத்தும்” இவ்வாறு அவர் பேசினார்.