Published : 11 Feb 2023 04:25 PM
Last Updated : 11 Feb 2023 04:25 PM

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கைகூடவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி வேதனை

மதுரை: "இந்திக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனால், தமிழ் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கைகூடவில்லை என்பது வேதனைக்குரியது. இது நீதித் துறையில் தொடரும் அசமத்துவத்தின் சாட்சியாகும்" என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில மொழிகளில் உயர் நீதிமன்றங்களில் வழக்காடுவதற்கு மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறதா? இதற்காக மாநில அரசுகளிடம் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கேட்கப்பட்டுள்ளன? மாநில மொழிகளிலும் நீதி முறைமை அமைய பொது சட்ட அகராதியை ஒன்றிய அரசு தயாரித்துள்ளதா? என நாடாளுமன்றத்தில் கேள்வி (கேள்வி எண் 1450/10.02.2023) எழுப்பி இருந்தேன்.

இதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரேன் ரிஜ்ஜு பதில் அளித்துள்ளார். "உச்ச நீதிமன்றம் மற்றும் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் அவற்றின் நடைமுறைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே அமையும் என அரசியல் சட்டப் பிரிவு 348 (1) (ஏ) கூறுகிறது. மேற்கண்ட பிரிவு (1) (ஏ) இல் தெரிவிக்கப்பட்டதைக் கடந்து ஆளுநர், குடியரசு தலைவரின் முன் அனுமதியுடன், உயர் நீதிமன்ற முதன்மை இருக்கை அமைந்துள்ள அம்மாநிலத்தில் அந்த நீதிமன்ற நடைமுறைகள் இந்தியிலோ அல்லது அலுவல் நோக்கங்களுக்கு அம்மாநிலத்தில் பயன்படுத்தப்படும் வேறு மொழிகளிலோ அமைவதை அங்கீகரிக்கலாம் என அரசியல் சட்டப் பிரிவு 348 (2) கூறுகிறது.

21.05.1965 தேதியிட்ட அமைச்சரவைக் குழு முடிவின்படி, உயர் நீதிமன்றங்களில் ஆங்கிலம் தவிர்த்த மொழிகளைப் பயன்படுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இந்திக்கு கிட்டிய அனுமதி: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நடைமுறைகளில் இந்தியைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் அரசியல் சட்டப் பிரிவு 348 (2) இன் அடிப்படையில் 1950 இல் வழங்கப்பட்டது. 21.05.1965 தேதியிட்ட அமைச்சரவைக் குழு முடிவுக்கு பிறகு இந்தி பயன்பாடு உத்தரப் பிரதேசம் (1969), மத்தியப் பிரதேசம் (1971), பீகார் (1972) ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை செய்து வழங்கப்பட்டது.

இந்திய அரசுக்கு தமிழ்நாடு, குஜராத், சட்டிஸ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளி, கன்னடம் ஆகிய மொழிகளை முறையே சென்னை உயர் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், சட்டிஸ்கர் உயர் நீதிமன்றம் , கல்கத்தா உயர் நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் அனுமதிக்குமாறு மாநில அரசுகள் முன் மொழிவுகளை அனுப்பி இருந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுரை இம் முன் மொழிவுகள் மீது கோரப்பட்டது. முழு நீதிமன்றம் இது குறித்து உரிய பரிசீலனை செய்து முன் மொழிவுகளை ஏற்பதில்லை" என்று முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

தமிழுக்கு மீண்டும் மறுப்பு: தமிழ்நாடு அரசிடம் இருந்து வந்த இன்னொரு வேண்டுகோளின் அடிப்படையில் இது குறித்த முந்தைய முடிவை மறு பரிசீலனை செய்யுமாறும், உச்ச நீதிமன்ற ஒப்புதலை தெரிவிக்குமாறும் தலைமை நீதிபதியை அரசு கேட்டுக் கொண்டது. விரிவான பரிசீலனைக்கு பின்னர் முன் மொழிவுக்கு முழு நீதிமன்றம் ஒப்புதல் தருவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும், முந்தைய முடிவையே மீண்டும் வலியுறுத்துவதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

எல்லா மொழிகளுக்கும் பொருந்துகிற வகையில், மாநில மொழிகளில் சட்ட ஆவணங்களை உருவாக்க உதவி செய்யும் வகையில் பொது சட்ட கலைச் சொல் அகராதியை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை ஒன்றிய சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ். ஏ. போட்பே தலைமையிலான "பாரதீய பாஷா சமிதி" குழு செய்து வருகிறது" என்று அமைச்சர் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சு. வெங்கடேசன் எம். பி கருத்து: “இந்திக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி அனுமதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால், தமிழ் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கைகூடவில்லை என்பது வேதனைக்குரியது.

இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்தை கருத்தில் கொண்டு இந்திய நீதி முறைமையில் மாநில மொழிகள் இணைக்கப்படுவதற்கான காலம் வந்துவிட்டது; நீதிமன்றங்கள் மற்றும் ஜனநாயகத்தின் இதர அமைப்புகளும் சமூக - புவி சார் பன்மைத்துவத்தை கண்ணாடி போல பிரதிபலிக்க வேண்டும் என்று 2022 ஏப்ரல் மாதம் மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டில் அன்றைய தலைமை நீதிபதி என். வி.இரமணா அவர்களே பேசினார். இருந்தாலும் இக் கோரிக்கை ஈடேறவில்லை. இது நீதித்துறையில் தொடரும் அசமத்துவத்தின் சாட்சியாகும்” என்று சு.வெங்கடேசன் எம். பி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x