

சென்னை: நாடு முழுவதுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான ஜேஇஇ பிரதானத் தேர்வு கடந்த ஜூன் 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்தாண்டு கவுகாத்தி ஐஐடி நடத்திய இந்த தேர்வை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 80,372 மாணவர்கள் எழுதினர். அதன் முடிவுகள் /jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று காலை வெளியிடப்பட்டது. தேர்வெழுதியதில் 7,509 மாணவிகள் உட்பட மொத்தம் 43,773 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் ஐதராபாத் ஐஐடி மண்டலப் பகுதியை சேர்ந்த மாணவர் வவிலலா சித்விலாஸ் ரெட்டி 360-க்கு 341 மதிப்பெண்கள் பெற்று தேசியளவில் முதலிடம் பெற்றுள்ளார். அதே மண்டலத்தை சேர்ந்த மாணவி நாயகன்டி நாக பாவ்ய ஸ்ரீ, பெண்கள் பிரிவில் 298 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை /jeeadv.ac.in/ எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.