பெண் குறித்து அவதூறு: கர்நாடகாவில் பதுங்கியிருந்த யூடியூபர் முக்தார் கைது

பெண் குறித்து அவதூறு: கர்நாடகாவில் பதுங்கியிருந்த யூடியூபர் முக்தார் கைது
Updated on
1 min read

சென்னை: யூடியூப் சேனலில் பெண்ணை இழிவுப்படுத்தி காணொலி வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில், யூடியூபர் முக்தார், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவின் சைபர் குற்ற காவல் நிலையத்தின் சமூக ஊடக விசாரணைப் பிரிவு, பெண் ஒருவரின் கண்ணியத்தையும் தனியுரிமையையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச மற்றும் பாலியல் ரீதியான கருத்துகளை இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளது.

சென்னை மாநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பெருநகர சென்னை காவல் ஆணையரிடம் இது குறித்து 03.06.2026 அன்று புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், ‘MY INDIA 24x7’ என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட காணொலியில், அவரையும் அவரது புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளையும் குறித்து ஆபாசமான, இழிவான மற்றும் பாலியல் ரீதியான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்டது.

இது குறித்து சென்னை பெருநகர மத்திய குற்றப் பிரிவு சைபர் குற்ற காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய திருச்சி சூர்யா (33) என்பவர் கடந்த 04.06.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தார் அகமது (48) கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் வைத்து நேற்று (09.06.2026) கைது செய்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட முக்தார் அகமது இன்று (10.06.2026) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மேலும் இவர் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் இதுபோன்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருவதால், இவர் மீது 20-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையர், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்களில் பெண்களை அவமதிக்கும் வகையிலான ஆபாச, இழிவான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்களை வெளியிடுவது கடுமையான குற்றமாகும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குறித்து அவதூறு: கர்நாடகாவில் பதுங்கியிருந்த யூடியூபர் முக்தார் கைது
“பாரதிராஜா ஒரு புதிய வேதம் போல் வாழ்ந்து காட்டியவர்” - எஸ்.ஏ.சந்திரசேகர் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in