

சென்னை: “பாரதிராஜா ‘வேதம் புதிது’ என ஒரு படத்தை எடுத்தார்; ஆனால் அவரே ஒரு ‘புதிய வேதம்’ போல வாழ்ந்து காட்டியவர். பாரதிராஜாவின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும். அவரின் சில திரைப்படங்கள் இன்றைய தலைமுறைகள் படிக்க வேண்டிய பாடப்புத்தகம்” என இயக்குநர் ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஏ.சந்திரசேகர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒரு சரித்திரம் சினிமாவில் இருந்து நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கிறது. இது சாதாரண சரித்திரம் அல்ல. நண்பர்களாக ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு நண்பர்களையும் நான் இழந்து கொண்டு வருகிறேன்; இதையெல்லாம் நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பாரதிராஜாவின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்.
அவர் ‘வேதம் புதிது’ என ஒரு படத்தை எடுத்தார்; ஆனால் அவரே ஒரு ‘புதிய வேதம்’ போல வாழ்ந்து காட்டியவர். படங்கள் ஆரம்பிக்கும் போது அவருடைய கைகள் மேலே வருவதை யாராலும் மறக்க முடியாது.
பாரதிராஜாவின் சில திரைப்படங்கள் இன்றைய தலைமுறைகள் படிக்க வேண்டிய பாடபுத்தகம். அவரின் இழப்பு சினிமாவில் ஈடுகட்ட முடியாத ஒன்று; மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.