

முகமது ஆசிக் அப்துல்லா
சென்னை: ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு உயர் ரக கஞ்சா கடத்திய பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை பூக்கடை பகுதி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வடக்கு கடற்கரை, ஜாபர் சாரங் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரிடம் விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவரது உடைமைகளை சோதித்தபோது, அதில், உயர் ரககஞ்சா (ஓஜி கஞ்சா) மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த மண்ணடியைச் சேர்ந்த முகமது ஆசிக் அப்துல்லா (34) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் முகமது ஆசிக் அப்துல்லா பி.காம்.
படித்துவிட்டு ஹாங்காங்கில் வேலை செய்துள்ளதும், தற்போது சென்னையில் வசித்து வருவதும், பழக்கமான நண்பர்கள் மூலம் கஞ்சாவை ஹாங்காங்கிலிருந்து வரவழைத்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறையில் அடைத்த போலீஸார், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.