

சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும், ஜான் ஓபெத் (24) என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த இளைஞர் மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக மாணவியின் தாயார் கடந்த 2021-ம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ஜான் ஓபெத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஜான் ஓபெத்துக்கு போக்சோ சட்டப் பிரிவின்கீழ் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
‘அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகை பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.