

புதுடெல்லி: டெல்லியில் 400 ரூபாய் கடனைத் திருப்பித் தராத விவகாரத்தில், 26 வயது இளைஞரை கொன்று வீடியோ வெளியிட்ட 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து வடகிழக்கு டெல்லி காவல் துணை ஆணையர் ஆஷிஷ் மிஸ்ரா கூறியதாவது: வடகிழக்கு டெல்லியின் நியூ முஸ்தபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது கைஃப் (26). இவருக்குப் பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மூன்று சிறுவர்களிடம் கைஃப் 400 ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடனைத் திருப்பித் தருவதில் அவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் தயாள்பூர் பகுதியில் உள்ள 25 அடி சாலையில் கைஃப் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த அந்த மூன்று சிறுவர்கள், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் கைஃபை சரமாரியாகக் குத்தினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கைஃப் மீட்கப்பட்டு ஜகத் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை அந்தச் சிறுவர்கள் தங்களது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். மேலும், சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் வசனத்தை தலைப்பாக வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.இதையடுத்து, இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தங்களிடம் வாங்கிய 400 ரூபாயை திருப்பித் தராததால் கைஃபை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஆஷிஷ் மிஸ்ரா தெரிவித்தார்.