

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.| நீதிமன்றத்துக்குள் வீசப்பட்ட அரிவாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்ச வழக்கில் இன்று (பிப். 17) தீர்ப்பு வெளியாக விருந்த நிலையில், நீதிமன்றத்தில் நேற்று அரிவாளை வீசிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிளிமுத்து மகன் பாலமுருகன் (36). தொழிலாளி. இவரது மனைவி தங்கமுனீஸ்வரி (28). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்கின்றனர். தங்கமுனீஸ்வரி விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
குடும்ப நல நீதிபதி பணியிடம் காலியாக உள்ளதால், வன்கொடுமை தடுப்பு நீதிபதி கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். கடந்த 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வேறு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாலமுருகன் அரிவாளை நீதிமன்றத்தில் வீசினார். அப்போது காவலில் இருந்த போலீஸார், பாலமுருகனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து சிராஸ்தார் முருகையா அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸார் விளக்கம்: இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஜீவனாம்ச வழக்கில் பிப். 17-ம் தேதி (இன்று) தீர்ப்பு வெளியாகவிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாக கருதிய பாலமுருகன், நீதிமன்றத்துக்குள் வந்து அரிவாளை வீசியுள்ளார்.