

சென்னை: நொளம்பூரில் 75 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறித்து தப்ப முயன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் வசித்து வந்தவர் மேரி (75). இவருக்கு 2 மகன்கள். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர்.
மேரி மட்டும் கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒருவர், மேரியை தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது செயின் மற்றும் கம்மலை பறித்து தப்ப முயன்றார்.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி, வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அப்போது அங்கிருந்து கொலையாளி தப்பிக்க முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நொளம்பூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயன்றனர். அதிலிருந்த செவிலியர்கள் பரிசோதித்ததில் மேரி ஏற்கெனவே இறந்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் கொலையாளியை கைது செய்து அவரது பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேரியின் செயின், கம்மலை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்டது அதே பகுதியைச் சேர்ந்த காராமணி என்ற ஏழுமலை (72) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
“மூதாட்டி தனிமையில் வசித்து வருவதை அறிந்து அவர் அணிந்திருந்த நகையை பறிக்க திட்டம் தீட்டி அவர் வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த செயின், கம்மலை கழற்ற முயன்றபோது அவர் கூச்சலிட்டார். அவரை தடுக்கும் வகையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கினேன்.
அதில் அவர் மயங்கினார். பின்னர் மேரி அணிந்திருந்த செயின், கம்பலை கழற்றி எடுத்துக் கொண்டு தப்ப தயாரானேன். அதற்குள் அக்கம்பக்கத்து வீட்டினர் திரண்டு என்னை பிடித்துவிட்டனர்” என கைது செய்யப்பட்ட ஏழுமலை முன்னதாக வாக்குமூலம் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மூதாட்டி அணிந்திருந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரியவந்துள்ளது.