

பாலமுருகன்
சென்னை: பில்லி சூனியத்துக்கு பரிகார பூஜை செய்வதாக நடித்து பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற குடுகுடுப்பைக்காரர் கைது செய்யப்பட்டார்.
திருவான்மியூர், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மஞ்சு (40). இவரது கணவர் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 10-ம் தேதி அவர் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார். மஞ்சு மட்டும் வீட்டில் இருந்தார்.
அப்போது கையில் குடுகுடுப்பையுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வந்து வீட்டுக் கதவைத் தட்டினார். வெளியே வந்த மஞ்சுவைப் பார்த்து ‘உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பில்லி சூனியம் வைத்துள்ளனர். இதனால் கெடுதல் நடக்க உள்ளது. இது ஜக்கம்மா வாக்கு’ என குடுகுடுப்பையை அடித்து தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்.
இதனால், பயந்துபோன மஞ்சு, ‘இதைப் போக்க வழி ஏதும் உள்ளதா’ என பதற்றத்துடன் கேட்டார். அதற்கு ‘பரிகாரப் பூஜை செய்தால் தீங்கு நீங்கும். நன்மை பிறக்கும்’ என அந்த நபர் தெரிவித்தார். பரிகார பூஜையை உடனடியாக செய்யும்படி மஞ்சு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வீட்டுக்குள் வந்த அந்த நபர் ‘பூஜைப் பொருட்கள், ரூ.10 ஆயிரம் பணம், பட்டுப் புடவைகள் மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழட்டி தாம்பூலத்தில் வைக்குமாறு கூறினார்.
அதன்படி மஞ்சு அவர் அணிந்திருந்த சுமார் 4 பவுன் எடை கொண்ட 2 தங்க வளையல்கள் மற்றும் 1 ஜோடி தங்கக் கம்மல், பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பூஜைக்காக வைத்துள்ளார்.
பின்னர் அந்த நபர் தண்ணீர் கொண்டு வருமாறு கூறவே, மஞ்சு தண்ணீர் எடுத்து வருவதற்குள், குடுகுடுப்பைக்காரர் பூஜையில் வைத்திருந்த பணம், தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
அதிர்ச்சி அடைந்த மஞ்சு இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு நூதன திருட்டில் ஈடுபட்டது கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பாலமுருகன் (50) என்பது தெரியவந்தது. அந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.