

சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற முன்னாள் ஐஐடி விஞ்ஞானியிடம் சிபிஐ அதிகாரி எனக்கூறி மிரட்டி, ரூ.57 லட்சம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிபிஐ அல்லது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறிக் கொண்டு கும்பல் ஒன்று சிலருக்கு அழைப்பு விடுக்கும். எதிர் முனையில் பேசுவோரிடம், சட்ட விரோத செயல்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறி மிரட்டுவார்கள்.
பின்னர் அவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாகவும், அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் தாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு மாற்றுமாறும், நிரபராதி எனத் தெரிந்தால், பணத்தை மீண்டும் அனுப்பிவிடுவதாகவும், அதுவரை வெளியே செல்லக்கூடாது என்றும் மிரட்டுவார்கள்.
இவர்கள் சைபர் மோசடி கும்பல் என தெரியாமல், மிரட்டலுக்கு உள்ளானவர்கள் தங்களை நல்லவர்கள் என நிரூபிக்க பணத்தை அனுப்பி ஏமாற்றமடைவார்கள். இதுபோன்று பலர் கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை ஐஐடி-யில் பணியாற்றி ஓய்வு பெற்ற 77 வயது விஞ்ஞானியான ராமசாமி என்பவரிடம் அவரது செல்போன் எண் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று, சிபிஐ அதிகாரி பேசுவதுபோல பேசி, சைபர் மோசடி கும்பல் ரூ.57 லட்சத்தை பறித்துள்ளது.
இவர், மதிப்புமிக்க பத்மபூஷன் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புகாரின்பேரில் இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த கும்பல் கம்போடியாவிலிருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. அவர்களை கைதுசெய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.