

குன்றத்தூர்: குன்றத்தூரில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூரில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது, காரில் இருந்து திடீரென கதவு திறக்கப்பட்ட நிலையில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு சென்றனர்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அருகில் சென்று கீழே தள்ளி விடப்பட்ட பெண்ணை மீட்டபோது, அந்த பெண் லேசான சிராய்ப்பு காயங்களுடன் போதை மயக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, தகவல் அறிந்த குன்றத்தூர் போலீஸார், அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சை அளித்து விட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது அந்த பெண்ணின் பெயர் சத்யா (30) என்பதும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பெண்ணை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று விட்டு யாரிடமும் சொல்லாமல் அந்த பெண் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
போலீஸார் விசாரணை: மேலும், அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக தள்ளிவிட்டு சென்றனர். அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் குன்றத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.