

சஞ்சய், பிரவீன், பாஸ்கர்
சென்னை: பழிக்குப் பழிவாங்க ஆயுதங்களுடன் தயாராக நின்றிருந்த 3 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. புளியந்தோப்பு போலீஸார் நேற்று முன்தினம் மதியம், அதே பகுதி வ.உ.சி. நகர் 4-வது தெருவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைவான இடத்தில் 3 பேர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதித்தபோது, அதில் 6 கத்திகள் இருந்தது தெரியவந்தது.
போலீஸார் கத்தி வைத்திருந்த புளியந்தோப்பு, சுந்தரபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் (22), வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்ற பிரவீன் (23), கனகராய தோட்டத்தைச் சேர்ந்த விஜய் என்ற பாஸ்கர் (21) ஆகிய 3 பேரை கைது செய்து, கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
முன் விரோதம்: விசாரணையில், கைது செய்யப்பட்ட சஞ்சய் என்பவருக்கும், புளியந்தோப்பைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்து வரும் இளைஞர் ஒருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. அந்த தரப்பினரை சஞ்சய், தனது ஆதரவாளர்களுடன் சென்று அரிவாளால் வெட்டியுள்ளார். பதிலுக்கு அவர்களும் சஞ்சயின் தம்பியை வெட்டியுள்ளனர்.
இந்த முன் விரோதத்துக்கு பழிவாங்கும் வகையில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த மீன் வியாபாரியை கொலை செய்ய சஞ்சய் தனது நண்பர்களுடன் ஆயுதங்களுடன் தயாராக நின்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது.