

சென்னை: தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி என மிரட்டி, பெண்ணிடம் டிஜிட்டல் மோசடியில் பறிக்கப்பட்ட ரூ.20 லட்சத்தை சைபர் க்ரைம் போலீஸார் 14 நாட்களில் மீட்டுக் கொடுத்துள்ளனர்.
சென்னை முகப்பேர் மேற்கு, அண்ணாமலை அவென்யூவில் வசிப்பர் லதா(54). கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 23-ம் தேதி வந்த அழைப்பில் பேசிய நபர், தன்னை சென்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
தொடர்ந்து அவர், ‘நீங்கள் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்துள்ளீர்கள். உங்களது வங்கி கணக்கு விபரங்களை பரிசோதித்ததில், இது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.
சிறிது நேரத்தில் உங்களையும் உங்கள் கணவரையும் கைது செய்ய உங்கள் வீட்டுக்கு வர உள்ளோம்’ என மிரட்டினார். பயந்துபோன லதா, ‘நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை’ என மறுத்துள்ளார்.
ஆனால், அந்த நபர் வீடியோ கால் வழியாக தொடர்ந்து மிரட்டி, அவர்களை 3 நாள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் டிஜிட்டல் கைது செய்து வைத்துள்ளார்.
பின்னர், ‘நீங்கள் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றால், நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதையும் பரிமாற்றம் செய்யுங்கள்.
உங்கள் மீது குற்றம் இல்லை என்றால், விசாரணை செய்துவிட்டு மீண்டும் பணத்தை உங்களது வங்கிகணக்குக்கு அனுப்பி விடுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து லதா, அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு ரூ.20 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு மிரட்டல் விடுத்த நபரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லதா, இதுதொடர்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவன கணக்குக்கு அந்த பணம் சென்றிருப்பதை உறுதி செய்து, அந்த மாநில போலீஸார் உதவியுடன் லதாவின் ரூ.20 லட்சத்தை முடக்கினர்.
பின்னர், அந்த பணத்தை லதாவிடமே, 14 நாட்களில் மீட்டுக் கொடுத்தனர். மேலும், போலீஸ் அதிகாரி என மிரட்டிய நபரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.