

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ரொசாரியோ (36). இவரது மனைவி நந்தினி(29). இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் வடசேம பாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். நந்தினியை கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி, அவரது மாமியார் கிறிஸ்தோப்மேரி கடந்த டிச.29-ம் தேதி அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், நந்தினி மட்டும் வீடு திரும்பாத நிலையில், அவரை அழைத்து சென்ற கிறிஸ்தோப்மேரியிடம் மரியசொசாரியோ கேள்வி எழுப்பிய போது உரிய பதில் அளிக்கவில்லை. நந்தினியின் செல்போன் எண்ணும் ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சங்கராபுரம் போலீஸார் காணாமல் போனவர் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கிறிஸ்தோப்மேரி மீது சந்தேகம் அதிகரித்த நிலையில், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், தனது மகனை மறுமணம் செய்து கொண்ட மருமகள் நந்தினியை கொலை செய்து, அவரது தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்தும் சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு கிராமம் அழகாபுரம் செல்லும் சாலையில் உள்ள மணிமுக்தா ஆற்றங்கரை பகுதியில் வெவ்வேறு இடங்களில் புதைத்து இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து தோப்மேரி அடையாளம் காட்டிய இடங்களில் தோண்டப்பட்டு, நந்தினியின் உடலை மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதன் அறிக்கை கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் நந்தினியின் உடல் வெட்டப்பட்டுள்ளதால், பெண் ஒருவர் தனி நபராக செய்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு துணையாக சிலர் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிறிஸ்தோப்மேரி கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடந்து வருகிறது.