

கைது செய்யப்பட்ட கிஷோர்
சென்னை: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, சென்னை மந்தைவெளியை சேர்ந்த பெண் ஐடி ஊழியரிடம் ரூ.24.89 லட்சம் மோசடி செய்த வழக்கில், கர்நாடகாவை சேர்ந்த மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, மந்தைவெளியை சேர்ந்தவர் சுதா கார்த்திக் (44). மென் பொறியாளர். கடந்த ஆண்டு இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் இருந்த டெலிகிராம் குழுவில் சுதா இணைந்தார். அந்த குழுவில் அனுப்பிய சில ‘டாஸ்க்’-குகள் மூலம் சுதா சிறிது லாபம் பெற்றுள்ளார். பின்னர் அதனை நம்பி, தொடர்ந்து அதிகளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளார்.
அந்த வகையில், பல்வேறு தவணைகளாக ரூ.24.89 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு எந்தவித பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா, சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸில், கடந்த ஆண்டு பிப்.10-ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்கள் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்த நிலையில், கடந்த 17ம் தேதி தீபா (26) என்ற பெண்ணை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிஷோர் (27) என்ற நபரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் தீபாவுக்கு வங்கி கணக்கு தொடங்க கிஷோர் உதவி செய்தது, மோசடி பணத்தை எடுக்க உதவி புரிந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கிஷோர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.