

சேலம்: வாழப்பாடி அருகேயுள்ள கருமந்துறையில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த கல்வராயன் மலை கருமந்துறை அருகேயுள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). திமுக கிளைச் செயலாளரான இவருக்கு, மனைவி சரிதா (40), மகள்கள் கோகிலா, பரிமளா, மகன் நவீன் ஆகியோர் உள்ளனர். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்குமிடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன், மனைவி சரிதாவுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் பள்ளம் இருந்ததால் மனைவியை இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தை மெதுவாக இயக்கியுள்ளார்.
அப்போது வனப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ராஜேந்திரன் உடலில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பியோடினர். கண்முன்னே கணவர் கொல்லப்பட்டதைப் பார்த்து மனைவி சரிதா கதறி அழுதார். இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீஸார் அங்கு வந்து, ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் நேற்று காலை சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கொலை தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராஜேந்திரனை சுட்டுக் கொன்ற இடத்தில் மனைவி சரிதா மட்டுமே இருந்ததால், அங்கு எத்தனை பேர் இருந்தார்கள், எப்படி தப்பித்து ஓடினார்கள் உள்ளிட்ட விவரங்களை சரிதாவிடம் போலீஸார் கேட்டறிந்தனர். மேலும், ராஜேந்திரனுக்கும், வேறு யாருக்கும் முன்விரோதம் உள்ளதா அல்லது மிரட்டல் விடுக்கப்பட்டதா என்றும் போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, நிலத்தகராறு குறித்து சரிதா போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். நிலம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்ததையும் போலீஸார் கேட்டறிந்தனர். நிலத்தகராறு தொடர்பான் முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை நடந்துள்ளதால், அப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வந்து விட்டது. மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதனிடையே, ராஜேந்திரன் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதையொட்டி, அரசு மருத்துவமனை மற்றும் அவரது கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக பிரமுகர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்புமணி கண்டனம்: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக நிர்வாகி ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக, தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களை காக்கத் தவறிய திமுகவுக்கு மக்கள் சரியான தண்டனை அளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.