பச்சிளம் குழந்தை சடலம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட வழக்கு: திருமணமாகாமல் பிறந்ததால் குழந்தையை கொன்றதாக பெண் வாக்குமூலம்

பச்சிளம் குழந்தை சடலம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட வழக்கு: திருமணமாகாமல் பிறந்ததால் குழந்தையை கொன்றதாக பெண் வாக்குமூலம்
Updated on
1 min read

சென்னை: கீழ்ப்​பாக்​கம் தியாகப்பா தெரு​வில் உள்ள மாநக​ராட்சி பள்ளி அருகே உள்ள குப்​பைத் தொட்​டி​யில், கடந்த 28-ம் தேதி சாக்​குப் பையில் சுற்​றப்​பட்ட நிலை​யில் பச்​சிளம் ஆண் குழந்​தை​யின் சடலம் கிடப்​பதை அப்​பகுதி மக்​கள் பார்த்து போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும் வழக்​குப் பதிந்து விசா​ரணை​யைத் தொடங்​கினர்.

முதல்​கட்​ட​மாக கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்த போலீ​ஸார், கீழ்ப்​பாக்​கம் தியாகப்பா தெரு​வில் உள்ள ஒரு தொழில​திபர் வீட்​டில் பராமரிப்​புப் பணி​யாள​ராக வேலை செய்து வந்த பிரி​யங்கா (22) என்​பவரை பிடித்து விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில், தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணத்​தைச்சேர்ந்த பிரி​யங்​கா, தனது சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞருடன் கடந்த 6 ஆண்​டு​களாக காதல் உறவில் இருந்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

அதனால் கடந்த ஆண்டு அக்​டோபரில் கர்ப்​பமடைந்த பிரி​யங்​கா, அதை குடும்​பத்​தினரிடமோ, வேறு யாரிடமோ தெரிவிக்​காமல் மறைத்து வைத்​திருந்​துள்​ளார். இந்த மாதம் 12-ம் தேதி கீழ்ப்​பாக்​கம் தொழில​திபர் வீட்​டில் பராமரிப்​புப் பணிக்கு சேர்ந்​திருந்த பிரி​யங்கா​வுக்​கு, கடந்த 27-ம் தேதி நள்​ளிரவு பிரசவ வலி ஏற்​பட்​டுள்​ளது.

அப்​போது அவர் வேலை பார்த்து வந்த வீட்​டின் கழிப்​பறை​யிலேயே ஆண் குழந்​தையை பெற்​றெடுத்​துள்​ளார். பிறந்த குழந்தை அழு​தால் வெளி​யில் தெரிந்​து​விடுமோ என்ற அச்​சத்​தில் குழந்​தை​யின் வாய், மூக்கை கையால் அழுத்தி உள்​ளார். இதனால் குழந்தை மூச்​சுத்​திணறி உயி​ரிழந்​துள்​ளது.

பிறகு பிரி​யங்​கா, தனது தோழிகள் மற்​றும் பணி​யிடத்​தில் பழக்​க​மான சிலரிடம் செல்​போனில் தொடர்​பு​கொண்டு ஆலோ​சனை கேட்​டுள்​ளார். பின்​னர், வீட்​டில் இருந்த பிளாஸ்​டிக் அரிசி மூட்டை பையில் குழந்​தை​யின் சடலத்தை வைத்து அதி​காலை​யில் குப்​பைத்​தொட்​டி​யில் வீசிச் சென்​ற​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

திரு​மண​மா​காமல் குழந்தை பெற்​றது வெளி​யில் தெரிந்​து​விடும் என்ற அச்​சத்​திலேயே இந்​தச் செயலில் ஈடு​பட்​ட​தாக பிரி​யங்கா வாக்​குமூலம் அளித்​திருப்​ப​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து பிரி​யங்கா கைது செய்​யப்​பட்​டுள்​ளார். மேலும் சம்​பவத்​துக்​குப் பிறகு அவருடன் தொடர்​பில் இருந்​தவர்​கள் மற்​றும் அவருக்கு ஆலோ​சனை வழங்​கிய​தாகக் கூறப்​படுபவர்களிட​மும் போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

பச்சிளம் குழந்தை சடலம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட வழக்கு: திருமணமாகாமல் பிறந்ததால் குழந்தையை கொன்றதாக பெண் வாக்குமூலம்
எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in