சென்னை | கவரிங் நகை கொடுத்து ரூ.27,000 மோசடி செய்த பெண்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சென்னை | கவரிங் நகை கொடுத்து ரூ.27,000 மோசடி செய்த பெண்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

சென்னை: ராசியானது என நம்ப வைத்து கவரிங் நகையை தங்க நகை போல கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி டி.டி. பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் சுதா (40).

நேற்று முன்தினம் மாலை வீட்டருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வயது குழந்தையுடன் வந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன்னை ஈரோட்டைச் சேர்ந்தவர் என்றும், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் கோபித்துக் கொண்டு சென்னை வந்துவிட்டதாகவும், அவரைத் தேடி சென்னையில் அலைந்து திரிவதாகவும் கூறினார்.

7 கிராம் தங்க நகை

மேலும் தன்னிடம் இருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டதால், தன்னுடைய தங்க நகையை அடகு வைத்து பணம் பெற்றுத் தருமாறு சுதாவிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய சுதா, அந்த பெண்ணை அருகிலிருந்த அடகுக் கடைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அந்த பெண் சுமார் 7 கிராம் எடையுள்ள தங்க நகையை கழற்றிக் கொடுத்தார். அடகுக் கடை உரிமையாளர் நகையை பரிசோதனை செய்து, அது உண்மையான தங்கம் என்றும், ரூ.27 ஆயிரம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பெண் சுதாவை வெளியே அழைத்துச் சென்று, அந்த நகை தனக்கு மிகவும் ராசியானது என்பதால் அடகு வைக்க விரும்பவில்லை என்றும், அதற்கு பதிலாக சுதா ரூ.27 ஆயிரம் கொடுத்தால் நகையை நீங்களே வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய சுதா, வீட்டுக்குச் சென்று ரூ.27 ஆயிரத்தை எடுத்துவந்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த பெண், குழந்தையுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து சந்தேக மடைந்த சுதா, அந்த நகையை மீண்டும் அடகுக் கடைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அது கவரிங் நகை எனத் தெரியவந்தது. அப்போதுதான் அடகுக் கடையில் காண்பித்த நகை வேறு, சுதாவிடம் வழங்கிய நகை வேறு என்பது தெரிந்தது.

கவரிங் நகை கொடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா, இது தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை | கவரிங் நகை கொடுத்து ரூ.27,000 மோசடி செய்த பெண்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை
சாலைகள் சாகசத்துக்கு அல்ல; பயணத்துக்கே: மாணவர்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in