

| படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: சாலைகள் சாகசத்துக்கு அல்ல, பாதுகாப்பான பயணத்துக்கே என காவல் ஆணையர் அமல்ராஜ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் காவல் ஆணையர் அமல்ராஜ் கலந்துகொண்டு, விபத்தின்போது பொன்னான நேரத்தில் (Golden Hour) காயமடைந்தவர்களை மீட்டு உயிர் காப்பாற்றிய காவலர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், செவிலியர்கள், ஆட்டோ டிரைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது: விபத்துகளை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் விபத்துகள் குறைந்துள்ளன. என்றாலும், அவற்றை முழுமையாகத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
18 வயதுக்கு குறைவான சிறுவர்களை பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. அதையும் மீறி ஓட்டி விபத்து ஏற்பட்டால் வழக்கில் சிறுவர்களுக்கு வாகனத்தை வழங்கிய பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் சென்னையில் 2,206 சாலை விபத்துகள் பதிவாகி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 280 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் சாகசம் செய்வதற்கான இடமல்ல, பாதுகாப்பாக பயணிக்க வேண்டிய வழித்தடம் என்பதை மாணவர்கள்உட்பட அனைவரும் உணர வேண்டும்.
பைக்கை ஓட்டிச் செல்வோரும், பின்னால் அமருபவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு காவல் ஆணையர் அமல்ராஜ் பேசினார்.
நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. `நீயா நானா' கோபிநாத் விழிப்புணர்வு உரையாற்றினார். பள்ளி மாணவர்களுக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டதுடன், இறுதியில் `சாலை விதிகளை மதிப்போம்' என்ற உறுதிமொழியை 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் ஏற்றனர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி, இணை ஆணையர் பகலவன், துணை ஆணையர்கள் பாலாஜி, மேகலீனா ஐடன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.