

சென்னை: அசோக் நகரைச் சேர்ந்த ஆண்டனி அமிர்த ராஜ் (51) என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டு நிறுவனம் நடத்திவரும் சின்னத்துரை என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. அவர் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த லட்சுமி பிரியா (45) என்பவர் அறிமுகமானார்.
இவர்கள் முக்கிய பிரமுகர்களைத் தெரியும் எனக் கூறியதை நம்பிய அமிர்தராஜ், தனது மகனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கித் தருமாறு கேட்டு சின்னத்துரை, பிரியா மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு 3 தவணைகளாக ரூ.42 லட்சம் அனுப்பியுள்ளார்.
ஆனால், உறுதியளித்தபடி கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து ரூ.4 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸில் அமிர்தராஜ் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் புகார் உண்மையென தெரியவந்ததையடுத்து, லட்சுமி பிரியாவை கைது செய்தனர். மீதமுள்ள அவர்களது கூட்டாளிகள் 4 பேரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். லட்சுமி பிரியா, தனியார் பள்ளி ஒன்றில் முன்பு ஆசிரியையாக பணி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.