

பல் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரியை தாக்கும் திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரர் ராஜா. | உள்படம்: தாக்குதலுக்கு ஆளான மகேஸ்வரி |
விழுப்புரம்: விழுப்புரம் தனலட்சுமி கார்ட னைச் சேர்ந்தவர் ராஜா. இவர், தனது வீட்டின் முன்பு கடந்த நவ. 23-ம் தேதி கார் ஒன்றை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், அவரது வீட்டின் அருகே இயங்கி வரும் பல் மருத்துவமனையின், பல் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ராஜாவின் காரை சற்று தள்ளி நிறுத்த சொன்னதே, இந்த மோதலுக்கு காரணம் என தெரிகிறது. அப்போது மகேஸ் வரியை ராஜா, அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தில் தனது கையை மகேஸ்வரி கடித்ததாக ராஜா தரப்பில் கூறப்படுகிறது.
இச்சம்பவம் பற்றி தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த பல் மருத்துவர் தேவநாதனிடம், தான் ராஜாவால் தாக்கப்பட்டது குறித்து மகேஸ்வரி தெரிவித் துள்ளார். காயமடைந்த மகேஸ் வரி விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். தனது கையை மகேஸ்வரி கடித்து விட்டதாக ராஜாவும் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் ராஜாவுக்கு ஆதரவாக, அவரது சகோதரரான திருவெண்ணெய்நல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் சந்திர சேகரன் செயல்பட்டு மிரட்டல் விடுக்கிறார் என விழுப்புரம் எஸ்பி சரவணனிடம் மருத்துவர் தேவநாதன் கடந்த 25-ம் தேதி மனு அளித்துள்ளார்.
இதில், ‘எனது உதவியாளர் மகேஸ்வரி தாக்கப்பட்டதை அறிந்து சென்றேன். அவரை கத்தியால் வெட்ட வந்த ராஜாவை தடுத்து நிறுத்தினேன். என்னை பிடித்து தள்ளினார். பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவ மனைக்கு மகேஸ்வரியை சிகிச் சைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கே இருந்த ராஜா, அவரது சகோதரர் சந்திரசேகரன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தனர். புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றபோதும் மிரட்டினர்’ என்று தெரிவித்துள்ளார். ராஜா தரப்பிலும் புகார் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜா தரப்பில் அளித்த புகாரின்பேரில் பல் மருத்துவர் தேவநாதன், உதவியாளர் மகேஸ்வரி மீதும் மற்றும் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் ராஜா, அவரது மனைவி மகாலட்சுமி மீதும் விழுப்புரம் மேற்கு போலீஸார் தனித்தனியே கடந்த 24-ம் தேதி இரவு வழக்கு பதிவு செய்தனர்.
இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் கூறும்போது, ‘இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய் துள்ளோம். எங்களின் விசாரணை தொடர்கிறது’ என்றனர்.
இதற்கிடையில், பல் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரியை திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரர் ராஜா தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து தாக்குதலுக் குள்ளான மருத்துவ உதவியாளர் மகேஸ்வரியை நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இப்பிரச்சினை கடந்த 3 மாதங்களாக இருக்கிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், என்னை கண்மூடித்தனமாக ராஜா தாக்கினார்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சைக்கு என்னை அழைத்துச் சென்ற மருத்துவர் தேவநாதனை பிடித்து தள்ளி, தகராறு செய்தனர். மேலும், அரசியல் செல்வாக்கு இருப்பதால் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
எனக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என்றார்.பல் மருத்துவ உதவியாளர் மகேஸ்வரியை தாக்கும் திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரர் ராஜா. உள்படம்: தாக்குதலுக்கு ஆளான மகேஸ்வரி.