

புதுச்சேரி: முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்தாண்டு மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். 2 நாட்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக 500 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.
இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்தாண்டு செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணை முடிந்த நிலையில் வரும் 30-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.